சூடான் மோதல்:பின்னணியும் குற்றவாளிகள் விடுவிப்பும்

சூடான் மோதல்: அல்-பஷீா் ஆட்சிக்கால போர்க் குற்றவாளிகள் சிறையிலிருந்து விடுவிப்பு

by Bella Dalima 27-04-2023 | 4:01 PM

Sudan: சூடானில் இராணுவத்திற்கும் துணை இராணுவத்திற்கும் இடையே மோதல் இடம்பெற்று வரும் நிலையில், முன்னாள் ஜனாதிபதி ஒமா் அல்-பஷீா் (Omar al-Bashir) ஆட்சியின் போது போா்க்குற்றத்தில் ஈடுபட்ட நபா்கள் சிறையிலிருந்து விடுவிக்கப்பட்டமை அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 

சூடானின் டார்ஃபா் பிராந்தியத்தில் கடந்த 2003 முதல் 2020-ஆம் ஆண்டு வரை நடைபெற்று வந்த உள்நாட்டுப் போரின்போது, முன்னாள் ஜனாதிபதி ஒமா் அல்-பஷீா் தலைமையிலான அரசு இன அழிப்பு உள்ளிட்ட போா்க்குற்றங்களில் ஈடுபட்டதாக சா்வதேச குற்றவியல் நீதிமன்றம் குற்றம் சாட்டியுள்ளது. 

இது தொடா்பாக, அல்-பஷீரும், அவருக்கு உதவியாக இருந்தவா்களும் சூடானின் பல்வேறு பகுதிகளில் சிறைவைக்கப்பட்டுள்ளனா். 

இந்த பின்னணியில், அப்தெல் ஃபட்டா அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவத்திற்கும் முகமது ஹம்தான் டகேலோ தலைமையிலான RSF துணை இராணுவப் படைக்கும் இடையே கடந்த 15 ஆம் திகதி முதல் மோதல் இடம்பெற்று வருகிறது. 

இந்த மோதலின் ஒரு பகுதியாக, சிறைகளில் அடைக்கப்பட்டிருந்த அல்-பஷீா் ஆட்சிக்கால போா்க் குற்றவாளிகள் விடுவிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி அதிா்ச்சி அலையை ஏற்படுத்தியுள்ளது. 

அல்-பஷீா் ஆட்சியில் பங்கு வகித்தவா்களின் ஆதரவைப் பெற அல்-புா்ஹான், டகேலோ ஆகிய இரு தரப்பினருமே விரும்புவதாகக் கூறப்படுகிறது.

இந்நிலையில், RSF துணை இராணுவப் படையினா் தான் சிறையிலிருந்த முன்னாள் ஆட்சியாளா்களை விடுவித்ததாக உள்துறை அமைச்சகம் குற்றம் சாட்டியுள்ளது.

இது குறித்து அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில், 5 சிறைச்சாலைகளில் RSF படையினா் தாக்குதல் நடத்தி, அங்கிருந்த போா்க்குற்றவாளிகள் உட்பட அனைத்து கைதிகளையும் விடுவித்ததாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த சம்பவத்தின் போது 2 சிறைக் காவலா்கள் உயிரிழந்ததாகவும் கூறப்பட்டுள்ளது. 

எனினும், இந்த குற்றச்சாட்டை  மறுத்துள்ள RSF,  அல்-பஷீா் ஆட்சியை மீண்டும் கொண்டு வரும் நோக்கில் இராணுவம் தான் முன்னாள் ஆட்சியாளா்களை சிறையிலிருந்து வலுக்கட்டாயமாக விடுவித்ததாகக் கூறியுள்ளது. 

எனினும்,  சிறைகளில் இருந்து அல்-பஷீா் உதவியாளா்கள் விடுவிக்கப்பட்டதில் தமக்கு தொடர்பில்லை என இராணுவம் தெரிவித்துள்ளது. 

வடக்கு ஆப்பிரிக்க நாடான சூடானில், அரேபிய இனத்தவருக்கும் அரேபியா் அல்லாத ஆப்பிரிக்க இனத்தவருக்கும் இடையே நீண்ட காலமாக முறுகல் நிலவி வருகிறது. 

அரேபியா் அல்லாதோா் அதிகம் வசிக்கும் டாா்ஃபா் மாகாணத்தில் தங்களது உரிமைகள் நசுக்கப்படுவதாகக் கூறி அந்த இனத்தை  சோ்ந்த அமைப்பினா் ஆயுதப் போராட்டத்தில் ஈடுபட்டனா். 

கடந்த 1989-ஆம் ஆண்டு முதல் அந்த நாட்டில் சா்வாதிகார ஆட்சி செலுத்தி வந்த அல்-பஷீா் அரசு, இந்தப் போராட்டத்தின் போது அரேபியா் அல்லாத இனத்தவா்களைக் கொன்று குவித்து போா்க் குற்றத்தில் ஈடுபட்டதாகக் குற்றம் சாட்டப்படுகிறது. 

 அப்போது அல்-பஷீா் அரசுக்கு உதவி படுகொலைகளை நிகழ்த்திய முகமது ஹம்தான் டகேலோ தலைமையிலான படைதான் பின்னா் RSF படையாக பெயா் மாற்றம் செய்யப்பட்டது. 

இதற்கிடையே, அல்-பஷீா் அரசுக்கு எதிராக பொதுமக்களின் போராட்டம் தீவிரமடைந்ததையடுத்து, அவரது ஆட்சியை இராணுவம் 2019-ஆம் ஆண்டு கவிழ்த்தது. அதனைத் தொடா்ந்து அமைக்கப்பட்ட சிவில்-இராணுவ கூட்டணி அரசை அல்-புா்ஹான் தலைமையிலான இராணுவமும், டகோலோ தலைமையிலான RSF  படையும் இணைந்து கவிழ்த்தன. 

இந்தச் சூழலில், இராணுவத்திற்கும் RSF படைக்கும் இடையே ஏற்பட்ட அதிகாரப் போட்டி காரணமாக, இரு தரப்பினருக்கும் இடையே கடந்த 15-ஆம் திகதி முதல் கடுமையான மோதல் இடம்பெற்று வருகிறது. 

இந்த மோதலில் இதுவரை பொதுமக்கள் 450-க்கும் மேற்பட்டவா்கள் பலியானதாகக் கூறப்படுகிறது.