.webp)
India: காங்கிரஸ் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ராகுல் காந்திக்கு 2 வருட சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
4 ஆண்டுகளுக்கு முன்பு தொடரப்பட்ட குற்றவியல் அவதூறு வழக்கில், ராகுல் காந்திக்கு 2 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து சூரத் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. எனினும், அவருக்கு உடனடியாக பிணை வழங்கப்பட்டுள்ளது.
நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேன்முறையீடு செய்ய ராகுல் காந்திக்கு 30 நாட்கள் அவகாசமும் வழங்கப்பட்டுள்ளது. நீதிமன்றத்தில் ராகுல் காந்திக்கு அதிகபட்ச தண்டனை வழங்க வேண்டும் என்று மனுதாரரின் வழக்கறிஞர் கோரியிருந்தார்.
இந்த வழக்கு, 2019 ஆம் ஆண்டில் மோடி குடும்பப் பெயர் தொடர்பாக அவர் தெரிவித்த கருத்துகளுடன் தொடர்புடையது.
"எல்லா திருடர்களுக்கும் மோடி என்ற குடும்பப்பெயர் இருப்பது எப்படி" என்று ராகுல் காந்தி பேசியிருந்தார்.
வியாழனன்று நடைபெற்ற வழக்கு விசாரணையின்போது, சூரத் நீதிமன்றத்தில் ராகுல் காந்தி நேரில் ஆஜராகி இருந்தார்.
விசாரணையின்போது, எந்த சமூகத்தையும் தனது பேச்சு மூலம் புண்படுத்த விரும்பவில்லை என்று ராகுல் காந்தி கூறியதாக பின்னர் செய்தியாளர்களை சந்தித்த அவரது வழக்கறிஞர்கள் குழு தெரிவித்தது.
தண்டனை அறிவிக்கப்பட்டதும், "என் மதம் சத்தியம் மற்றும் அகிம்சையை அடிப்படையாகக் கொண்டது, சத்தியம் என் கடவுள், அகிம்சை அதை அடைவதற்கான வழிமுறை." என்ற மகாத்மா காந்தியின் கருத்தை ராகுல் காந்தி தனது டிவிட்டர் பக்கத்தில் ட்வீட் செய்துள்ளார்.