.webp)
Colombo (News 1st) இலங்கையின் தலைமன்னாரில் இருந்து தனுஷ்கோடி வரையிலான பாக்கு நீரிணையை 10 மணி நேரம் 45 நிமிடங்களில் ஒன்றாக நீந்திக் கடந்து 7 பேர் சாதனை படைத்துள்ளனர்.
இந்தியாவின் கர்நாடக மாநிலத்தின் பெங்களூரில் அமைந்துள்ள திறந்த நீர் நீச்சல் அறக்கட்டளையை சேர்ந்த பிரசாந்த் ராஜண்ணா, ராஜசேகர் துபரஹள்ளி, ஜெயப்பிரகாஷ் முனியல் பாய், அஜத் அஞ்சனப்பா ஆகிய 4 வீரர்களும் சுமா ராவ், சிவரஞ்சனி கிருஷ்ணமூர்த்தி, மஞ்சரி சாவ்ச்சாரியா ஆகிய 3 வீராங்கனைகளுமே இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளனர்.
ராமேஸ்வரம் மீன்பிடி இறங்குதுறையிலிருந்து 2 படகுகளில் நீச்சல் பயிற்சியாளர் சுஜேத்தா தேப் பர்மன் தலைமையில் மீனவர்கள் உட்பட 16 பேர் கொண்ட குழுவினர் ஞாயிற்றுக்கிழமை பிற்பகல் தலைமன்னார் நோக்கி பயணித்தனர்.
தலைமன்னாரிலிருந்து நேற்று (13) அதிகாலை 5 மணிக்கு கடலில் குதித்து நீந்த ஆரம்பித்த 7 பேரும் மாலை 3.45 அளவில் (10 மணி நேரம் 45நிமிடங்கள்) தனுஷ்கோடி அரிச்சல்முனை பகுதியை அடைந்து சாதனை ஏட்டில் பதிவாகினர்.
இதற்கு முன்னர் தலைமன்னார் - தனுஷ்கோடி இடையிலான பாக்கு நீரிணையை 2019 ஆம் ஆண்டில் இந்தியாவின் தேனி மாவட்டத்தை ஆர். ஜெய் ஜஸ்வந்த் தனது 10 வயதிலும் 2022 ஆம் ஆண்டில் மும்பையை சேர்ந்த ஜியா ராய் என்ற ஆட்டிசத்தால் பாதிக்கப்பட்ட சிறுமி உள்ளிட்ட சிலர் குறைந்த வயதுகளில் நீந்திக் கடந்துள்ளனர்.
விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன் (ஆழிக்குமரன் ஆனந்தன்) 1975 ஆம் ஆண்டில் பாக்கு நீரிணையை நீந்திக் கடந்து கின்னஸ் சாதனைப் புத்தகத்தில் இடம்பிடித்தார் என்பதும் குறிப்பிடத்தக்கது.
அவர் மன்னாரில் இருந்து தனுஷ்கோடிக்கு நீந்தி அங்கிருந்து மீண்டும் மன்னாருக்கு நீந்தி சாதனை படைத்தார்.
யாழ்ப்பாணம் - வல்வெட்டித்துறையை பிறப்பிடமாகக் கொண்ட விவேகானந்தன் செல்வகுமார் ஆனந்தன், சிறுபிள்ளையிலேயே இளம்பிள்ளை வாதத்தினால் பாதிக்கப்பட்டவர்.