ஊழியர் மட்ட உடன்படிக்கையை சமர்ப்பிக்க தீர்மானம்

இலங்கை தொடர்பான ஊழியர் மட்ட உடன்படிக்கையை IMF-இன் நிறைவேற்றுக் குழுவில் சமர்ப்பிக்க தீர்மானம்

by Bella Dalima 08-03-2023 | 5:46 PM

Colombo (News 1st) இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் ஏற்படுத்திக்கொள்ளப்பட்ட ஊழியர் மட்ட உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) நிறைவேற்றுக்குழுவில் சமர்ப்பிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. 

சர்வதேச நாணய நிதியத்தின் தொடர்பாடல் பிரிவு நேற்று (07) வௌியிட்ட ஊடக அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இலங்கைக்கான நிதியுதவி தொடர்பில் சர்வதேச நாணய நிதியத்துடனான ஊழியர் மட்ட உடன்படிக்கை கடந்த ஆண்டு செப்டம்பர் முதலாம் திகதி ஏற்படுத்திக்கொள்ளப்பட்டிருந்தது. 

இந்த நிலையில், இலங்கை தற்போது அனைத்து முக்கிய இருதரப்பு கடன் வழங்குநர்களிடமிருந்தும் நிதி உறுதிப்பாடுகளைப் பெற்றுக்கொண்டுள்ளதாக சர்வதேச நாணய நிதியம் தெரிவித்துள்ளது. 

இதற்கமைய, குறித்த ஊழியர் மட்ட உடன்படிக்கையை சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழுவில் சமர்ப்பிப்பதற்கான சந்தர்ப்பம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. 

அத்துடன், சர்வதேச நாணய நிதியத்தின் நிறைவேற்றுக் குழு எதிர்வரும் 20 ஆம் திகதி கூடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. 

நிறைவேற்றுக் குழுவின் அனுமதியானது உலக வங்கி மற்றும் ஆசிய அபிவிருத்தி வங்கி உள்ளிட்ட ஏனைய கடன் வழங்குநர்களிடம் இருந்து நிதியுதவியை ஊக்குவிக்கும் எனவும் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.