.webp)
Colombo (News 1st) இந்தியா - இலங்கை இடையிலான பொருளாதார பரிவர்த்தனைகளுக்காக இந்திய ரூபாவை பயன்படுத்துவது குறித்த கலந்துரையாடல் இடம்பெற்றுள்ளதாக இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகராலயம் தெரிவித்துள்ளது.
இலங்கை வங்கி, State Bank Of India மற்றும் இந்தியன் வங்கி ஆகியவற்றின் பிரதிநிதிகள் தமது அனுபவங்களை இதன்போது பகிர்ந்துகொண்டுள்ளனர்.
இலங்கை மத்திய வங்கி மற்றும் இந்திய ரிசர்வ் வங்கி ஆகியவற்றால் கடந்த ஆண்டு வழங்கப்பட்ட நடைமுறைப்படுத்தல் கட்டமைப்பின் அடிப்படையில் Vostro/Nostro கணக்குகள் ஊடாக இந்திய ரூபா அடிப்படையிலான வர்த்தக பரிவர்த்தனைகளை தாம் ஏற்கனவே ஆரம்பித்திருப்பதாக குறித்த வங்கிகள் தெரிவித்துள்ளன.
குறுகிய காலக்கெடு, குறைந்த பரிமாற்ற கட்டணங்கள், இலகுவான வர்த்தகக் கடன் வசதிகள் ஆகியவை உள்ளிட்ட பல்வேறு நன்மைகள் இந்திய ரூபா மூலமாக மேற்கொள்ளப்படும் பரிவர்த்தனைகளின் ஊடாக கிடைக்கப்பெறுகின்றமை குறித்து இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இந்திய ரூபாயில் வர்த்தக ரீதியிலான பரிவர்த்தனைகளை மேற்கொள்வதற்கு இலங்கை மற்றும் இந்திய வர்த்தக சமூகத்தினர் மத்தியில் காணப்படும் வலுவான கோரிக்கைகள் குறித்து, இங்கு உரை நிகழ்த்திய இலங்கை மத்திய வங்கியின் ஆளுநர் கலாநிதி நந்தலால் வீரசிங்க சுட்டிக்காட்டினார்.
அத்துடன், நடைமுறைக் கணக்கு மற்றும் முழு அளவிலான மூலதன கணக்கு ஆகியவற்றின் பரிமாற்றங்களுக்காகவும் இந்த வசதியினை விஸ்தரிப்பதற்கும் அவர் இதன்போது அழைப்பு விடுத்தார்.
இந்த கலந்துரையாடலில் இலங்கை மத்திய வங்கியின் உயரதிகாரிகள், இலங்கை அரசாங்க அதிகாரிகள், சுற்றுலாத்துறை, ஊடகத்துறை மற்றும் வங்கித்துறையை சேர்ந்த அதிகாரிகள், பொருளாதார நிபுணர்கள் மற்றும் ஊடகவியலாளர்கள் உள்ளிட்ட பலர் இலங்கையை பிரதிநிதித்துவப்படுத்தி பங்கேற்றிருந்தனர்.
இதேவேளை, இந்திய ரிசர்வ் வங்கியின் அதிகாரிகள், இந்திய அரசாங்கத்தை சேர்ந்த உயர் அதிகாரிகள், வர்த்தக மற்றும் உற்பத்தித் துறை சார்ந்த சங்கங்களின் பிரதிநிதிகள், ஏற்றுமதி ஊக்குவிப்பு சபைகளின் உயர் அதிகாரிகள் உள்ளிட்டோர் மெய்நிகர் மார்க்கமூடாக இந்தியாவிலிருந்து பங்கேற்றிருந்தமை குறிப்பிடத்தக்கது.