.webp)
Colombo (News 1st) முறையற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக இன்று தேசிய எதிர்ப்பு தினத்தை செயற்படுத்தி, தொழில் வல்லுநர்களின் தொழிற்சங்க கூட்டமைப்பு எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்தது.
இதன் பிரதான ஆர்ப்பாட்டம் கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக நடைபெற்றது.
எதிர்ப்பு ஆர்ப்பாட்டம் காரணமாக கொழும்பு கோட்டை ரயில் நிலையத்திற்கு முன்பாக ஒரு வழி மூடப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.
நாற்பதுக்கும் மேற்பட்ட தொழிற்சங்கங்கள் இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் கலந்துகொண்டிருந்தன.
சுகாதாரம், கல்வி, நீர், மின்சாரம், வங்கிக்கட்டமைப்பு, நீர்வழங்கல், துறைமுகம், எண்ணெய், விமான சேவைகள் உள்ளிட்ட தொழிற்சங்கங்களின் கூட்டமைப்பினர் இன்றைய எதிர்ப்பு நடவடிக்கையில் பங்கேற்றனர்.
இந்நிலையில், வரிவிதிப்பு சட்டத்திற்கு எதிராக தொடர்ச்சியாக போராட்டம் நடத்தவுள்ளதாக அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் மத்திய குழு மற்றும் ஊடகக் குழு உறுப்பினர் டொக்டர் வாசன் ரத்னசிங்கம் குறிப்பிட்டார்.
இதனிடையே, முறையற்ற வரித் திருத்தத்திற்கு எதிராக இலங்கை தென்கிழக்கு பல்கலைக்கழக விரிவுரையாளர்கள் சங்கத்தினரால் இன்று ஆர்ப்பாட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. பல்கலைக்கழக வளாகத்திற்கு முன்பாக இந்த ஆர்ப்பாட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இதனிடையே, அரசாங்கத்திற்கு வரி செலுத்துவதற்கு தாம் இணங்கியுள்ள போதிலும், அந்த வரித்திருத்தம் முறையானதாக அமைய வேண்டும் என மின்சார பொறியியலாளர் சங்கத்தின் பிரதி செயலாளர் இசுரு கஸ்தூரிரத்ன தெரிவித்தார்.
பல தடவைகள் வரித்திருத்தத்தை மறுசீரமைக்குமாறு அரசாங்கத்திடம் கோரிக்கை விடுத்த போதிலும், அதற்கான உரிய பதில் கிடைக்கப்பெறாமையினால் இன்றைய நாள் தேசிய எதிர்ப்பு தினமாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அவர் கூறினார்.
இதனிடையே, முறையற்ற வரி அறவீட்டுக் கொள்கை மற்றும் அதிகரித்துச் செல்லும் வாழ்க்கைச் செலவு என்பனவற்றுக்கு எதிராக நீர்வழங்கல் தொழிற்சங்க கூட்டமைப்பினரும் நாட்டின் பல்வேறு பகுதிகளில் இன்று எதிர்ப்பு நடவடிக்கையை முன்னெடுத்திருந்தனர்.
இரத்மலானையில் அமைந்துள்ள நீர்வழங்கல் மற்றும் வடிகாலமைப்பு சபையின் பிரதான அலுவலகத்திற்கு முன்பாகவும் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது. சுமார் 02 மணித்தியாலங்களாக இந்த எதிர்ப்பு நடவடிக்கை இடம்பெற்றது.
இதனிடையே, அரசாங்கத்தின் நியாயமற்ற வரிக்கொள்கைக்கு எதிராக அனுராதபுரத்திலும் இன்று எதிர்ப்பு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அனுராதபுரம் வைத்தியசாலையின் அரச மருத்துவ அதிகாரிகள் சங்கத்தினர், ரஜரட்ட பல்கலைக்கழக கலாநிதிகளின் சம்மேளனம் மற்றும் நீர்வழங்கல் சபையின் ஊழியர் சங்கம் ஆகியன ஒன்றிணைந்து இந்த எதிர்ப்பு நடவடிக்கையை ஏற்பாடு செய்திருந்தன.
இதனிடையே, அரசாங்கத்தினால் தம்மால் முன்வைக்கப்பட்ட 08 கோரிக்கைகள் நிறைவேற்றப்படாமைக்கு சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று தமது நிலைப்பாட்டை அறிவித்தது.
இதற்கமைய, நாளைய தினம் அனைத்து அரச வைத்தியசாலைகளிலும் காலை 08 மணி முதல் நண்பகல் 12 மணி வரை பணிப்பகிஷ்கரிப்பை முன்னெடுக்க தீர்மானித்துள்ளதாக சுகாதார சேவைகள் தொழிற்சங்க கூட்டமைப்பு இன்று அறிவித்தது.
இந்த பணிப்பகிஷ்கரிப்பிற்கு நாடளாவிய ரீதியில் 30 தொழிற்சங்கங்கள் ஆதரவை தெரிவித்துள்ளதாக கூட்டமைப்பு தெரிவித்தது.