மத்தளை விமான நிலையம் தொடர்பான வௌிக்கொணர்வு

மத்தளை விமான நிலைய செலவு வருமானத்தை விட 21 மடங்கு அதிகம் - தேசிய கணக்காய்வு அலுவலகம்

by Staff Writer 19-02-2023 | 2:45 PM

Colombo (News 1st) மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் செயற்பாட்டு செலவுகள் அதன் வருமானத்தை விட 21 மடங்கு அதிகமென தேசிய கணக்காய்வு அலுவலகம் வௌிப்படுத்தியுள்ளது. 

வரையறுக்கப்பட்ட விமான நிலையம் மற்றும் விமான சேவைகள் நிறுவனத்தின் 2021ஆம் ஆண்டறிக்கை தொடர்பான ஆய்வறிக்கையை முன்வைத்து தேசிய கணக்காய்வு அலுவலகம் இதனை தெரிவித்துள்ளது. 

2017 முதல் 2021ஆம் ஆண்டு வரை மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் நிகர நஷ்டம் 20.59 பில்லியன் ரூபாவாகும் என குறித்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் எதிர்பார்க்கப்பட்ட வருடாந்த பயணிகள் கொள்ளளவு ஒரு மில்லியனாகக் காணப்பட்ட போதிலும், கடந்த 5 வருடங்களுக்குள் 91747 பயணிகள் மாத்திரமே இதனூடாகப் பயணித்துள்ளதாக சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

இவ்வாறான காரணங்களால் மத்தளை சர்வதேச விமான நிலையத்தின் கட்டுமானத்திற்காக பயன்படுத்தப்பட்ட நிதி வினைத்திறனான முறையில் பயன்படுத்தப்படவில்லை என தேசிய கணக்காய்வு அலுவலகம் அதன் ஆய்வறிக்கையில் சுட்டிக்காட்டியுள்ளது. 

இதனிடையே, இரத்மலானை விமான நிலையமும் தொடர்ச்சியாக நஷ்டத்தை சந்தித்து வருவதாக அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

2017 முதல் 2021ஆம் ஆண்டு வரையான காலப்பகுதிக்குள் இந்த விமான நிலையத்தின் ஊடாக 1,693 மில்லியன் ரூபாவிற்கும் அதிக நஷ்டம் ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.