தாயும் இரண்டு குழந்தைகளும் உயிருடன் மீட்பு

நிலநடுக்கம் ஏற்பட்டு 228 மணித்தியாலத்தின் பின்னர் துருக்கியில் தாயும் இரண்டு குழந்தைகளும் உயிருடன் மீட்பு

by Bella Dalima 17-02-2023 | 4:53 PM

Turkey: துருக்கி, சிரியாவில் ஏற்பட்ட அதிபயங்கர நிலநடுக்கத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 42,000-ஐ கடந்துள்ளது. 

இந்த கொடூர அனர்த்தத்திற்கு மத்தியிலும் சில ஆச்சரியமான நிகழ்வுகள் தொடர்ந்துகொண்டுதான் இருக்கின்றன. 

சிரியா எல்லையை ஒட்டிய துருக்கியின் காஸியான்டெப் நகரில் கடந்த 6-ஆம் திகதி 7.8 ரிக்டர் அளவில் ஏற்பட்ட நிலநடுக்கத்தின் போது இடிபாடுகளில் சிக்கியவர்கள் பல நாட்கள் கழித்தும் உயிருடன் மீட்கப்பட்டு வருகின்றனர். 

128 மணி நேர போராட்டத்திற்கு பின்னரும் உயிருடன் இருந்த 2 மாத குழந்தை உயிருடன் மீட்கப்பட்டது. சமீபத்தில் 74 வயது மூதாட்டி ஒருவரும் அதன் தொடர்ச்சியாக 46 வயது பெண் ஒருவரும் மீட்கப்பட்டனர். 

தற்போது, அன்டக்யாவில் (Antakya) இடிந்து வீழ்ந்த அடுக்குமாடி குடியிருப்பின் இடிபாடுகளுக்கு இடையே, கிட்டத்தட்ட 10 நாட்களுக்கு பிறகு தாயும் இரு குழந்தைகளும் உயிருடன் மீட்கப்பட்டுள்ளனர்.

எலா (Ela) என்ற பெண்ணும் அவரின் மெய்சம் (Meysam), அலி (Ali) என்ற இரு குழந்தைகளும் மீட்கப்பட்டுள்ளதாக அந்நாட்டு அரசு செய்தி நிறுவனமான அனடோலு தெரிவித்துள்ளது. 

சரியாக 228 மணி நேரம் தன் இரு குழந்தைகளையும் காப்பாற்றி தன் உயிரையும் தக்கவைத்துள்ளார் எலா. 

மிகவும் நெகிழ்ச்சியான இந்த நிகழ்வு குறித்து பலரும் சமூக ஊடகங்களில் பதிவிட்டு வருகின்றனர்.