புதிய சட்டங்களைக் கொண்டுவர திட்டம்

குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களை பதவி இடைநிறுத்த புதிய சட்டம்

by Bella Dalima 10-02-2023 | 3:50 PM

Colombo (News 1st) இலஞ்ச ஊழல் மோசடிகள் தொடர்பில் குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் உள்ளூராட்சி மன்ற தலைவர்களை பதவியில் இருந்து இடைநிறுத்தும் வகையில், புதிய சட்டங்களைக் கொண்டுவர அரசாங்கம் நடவடிக்கை எடுத்துள்ளது.

இதற்கு தேவையான சட்டமூலத்தை விரைவில் பாராளுமன்றத்திற்கு சமர்ப்பிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக உள்ளூராட்சி மன்ற இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புற தெரிவித்தார்.

தற்போது காணப்படும் சட்டங்களுக்கு அமைய, குற்றச்சாட்டுகள் சுமத்தப்படும் நகர மேயர்கள் மற்றும் உள்ளூராட்சி மன்ற தலைவர்கள், குற்றச்சாட்டுகள் நிரூபிக்கப்படும் வரை தொடர்ந்தும் பதவியில் செயற்படுவதற்கான சந்தர்ப்பம் உள்ளதாக அவர் கூறினார்.

இதனால், குற்றச்சாட்டு சுமத்தப்படுபவர்கள் தொடர்பில் நிறுவன மட்ட ஒழுக்காற்கு விசாரணை மேற்கொண்டு பதவியிலிருந்து இடைநிறுத்துவதற்கான புதிய சட்டத்தை கொண்டுவர எதிர்பார்ப்பதாக அமைச்சர் குறிப்பிட்டார்.

இதனூடாக உள்ளூராட்சி மன்ற தலைவர்கள் குற்றச்செயல்களில் ஈடுபடுவதை இயலுமானவரை குறைத்துக்கொள்ள முடியும் என இராஜாங்க அமைச்சர் ஜனக்க வக்கும்புற சுட்டிக்காட்டினார்.