.webp)
Colombo (News 1st) மகாத்மா காந்தியின் 75ஆவது சிரார்த்த தினம் இன்று(30) வடக்கு, கிழக்கில் அனுஷ்டிக்கப்பட்டது.
யாழ்.போதனா வைத்தியசாலைக்கு முன்பாக உள்ள மகாத்மா காந்தியின் நினைவுச்சிலை அமைவிடத்தில் இன்று(30) காலை மலரஞ்சலி செலுத்தப்பட்டது.
அகில இலங்கை காந்தி சேவா சங்கம், இந்திய துணைத் தூதரகத்தின் ஏற்பாட்டில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
இதன்போது காந்தியின் உருவச்சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
அத்தோடு, அகில இலங்கை காந்தி சேவா சங்கத்தின் வெளியீடான ''காந்தீயம்'' பத்திரிகையும் இதன்போது வெளியிடப்பட்டது.
இந்த நிகழ்வில் இந்திய துணைத்தூதுவர் ராகேஷ் நட்ராஜ் ஜெயபாஸ்கரன்,யாழ்.பல்கலைக்கழக துணைவேந்தர் பேராசிரியர் சி.சிறிசற்குணராஜா, வவுனியா பல்கலைக்கழக வேந்தர் சு.மோகனதாஸ், மாநகர ஆணையாளர் த.ஜெயசீலன், யாழ்.மாநகர சபை முதல்வர் இ.ஆர்னல்ட் உள்ளிட்ட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.
இதேவேளை, மகாத்மா காந்தியின் 75ஆவது சிரார்த்த தினம் மட்டக்களப்பில் அனுஷ்டிக்கப்பட்டது.
மட்டக்களப்பு காந்தி பூங்காவில் அமைந்துள்ள காந்தியடிகளாரின் நினைவுத் தூபியில் இந்த நிகழ்வு இடம்பெற்றது.
மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் தலைவர், கலாநிதி அ.செல்வேந்திரன் தலைமையில் இடம்பெற்ற இந்த நிகழ்வில் காந்தியடிகளாரின் திருவுருவச் சிலைக்கு மலர் மாலை அணிவிக்கப்பட்டு மலரஞ்சலியும் செலுத்தப்பட்டது.
இதன்போது மட்டக்களப்பு காந்தி சேவா சங்கத்தின் செயலாளர் க.பாரதிதாசன், மட்டக்களப்பு வர்த்தக சங்க செயலாளர் கே.தியாகராஜா உள்ளிட்ட சமூக ஆர்வலர்கள் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது ரகுபதி ராகவ ராஜாராம் பாடல் பாடி மரியாதை செலுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.