சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் ஒப்பந்தம்

சமூக மேம்பாட்டுத் திட்டங்கள் தொடர்பில் இருதரப்பு ஒப்பந்தம் கைச்சாத்து

by Bella Dalima 20-01-2023 | 5:18 PM

Colombo (News 1st) இந்திய அரசாங்கத்தின் ஆதரவுடன் இலங்கையில் நடைமுறைப்படுத்தப்பட்டசமூக மேம்பாட்டுத் திட்டங்களின் வரையறைகளை நீடிப்பது தொடர்பாக இருதரப்பு ஒப்பந்தம் இன்று கைச்சாத்திடப்பட்டது. 

இந்த ஒப்பந்தத்தில் இலங்கை தரப்பில் நிதி அமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தனவும் இந்திய தரப்பில் இலங்கைக்கான இந்திய உயர்ஸ்தானிகர் கோபால் பாக்லேவும் கைச்சாத்திட்டனர்.

ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்திய வெளிவிவகார அமைச்சர் கலாநிதி S.ஜெய்சங்கருக்கும் இடையில் இன்று காலை நடைபெற்ற சந்திப்பின் போதே, இந்த ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டது.

இந்த சந்திப்பு ஜனாதிபதி செயலகத்தில் நடைபெற்றது.

இலங்கையில் முன்னெடுக்கப்பட்டு வரும் சமூக மேம்பாட்டு வேலைத் திட்டங்களுடன் தொடர்புடைய இந்த ஒப்பந்தம் 2005 ஆம் ஆண்டு மே மாதம் கைச்சாத்திடப்பட்டது. 

இதற்கிணங்க, 300 மில்லியன் இலங்கை ரூபாவாக காணப்பட்ட தனிநபர் வேலைத் திட்டத்தின் வரையறை, இன்று கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் மூலம் 600 மில்லியன் இலங்கை ரூபாவாக இரட்டிப்பாக்கப்பட்டுள்ளது.

அத்துடன், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் நடைமுறைப்படுத்தப்பட்ட சில அபிவிருத்தி வேலைத் திட்டங்களும் இணையவழியூடாக அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டன.

கடந்த 2017 ஆம் ஆண்டு நாட்டிற்கு விஜயம் மேற்கொண்ட இந்திய பிரதமர் நரேந்திர மோடியினால், கண்டிய நடனத்திற்கான பயிற்சி நிறுவனமொன்றை நிர்மாணிப்பதற்கு அடிக்கல் நாட்டப்பட்டது.

கண்டி வரலாற்று சிறப்பு மிக்க தலதா மாளிகை வளாகத்திற்குள் நிர்மாணிக்கப்பட்டுள்ள குறித்த கல்வி நிறுவனத்தையே, இந்திய வெளிவிவகார அமைச்சர் இணையவழியூடாக திறந்து வைத்தார்.

மேலும், இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் காலி, கண்டி, நுவரெலியா மாவட்டங்களில் நிர்மாணிக்கப்பட்டு வரும் வீடமைப்பு தொகுதியில் முழுமையாக நிர்மாணிக்கப்பட்டுள்ள 300 வீடுகளை கையளிக்கும் நிகழ்வும் இந்திய வெளிவிவகார அமைச்சரினால் இணையவழி தொழில்நுட்பத்தின் உதவியுடன் முன்னெடுக்கப்பட்டது.

60,000 வீடுகளைக் கொண்ட இந்த வேலைதிட்டத்தில் 50,000 வீடுகளின் நிர்மாணப் பணிகள் பூர்த்தியடைந்துள்ளன.