எம்பலவத்த மக்களுக்கு கம்மெத்த மூலம் புதிய பாலம்

மஹியங்கனை - எம்பலவத்த மக்களுக்கு கம்மெத்தவிடமிருந்து புதிய பாலம்

by Staff Writer 13-01-2023 | 8:20 PM

Colombo (News 1st) பாலம் இல்லாமையால் மஹியங்கனை - எம்பலவத்த கிராம மக்கள் நீண்ட காலமாக அசௌகரியங்களை எதிர்நோக்கினர்.

இந்த பிரச்சினையால் பலரும் உயிரிழப்புகளை எதிர்நோக்க வேண்டிய நிர்பந்தம் ஏற்பட்டது. 

கிராம மக்கள் இதனை கம்மெத்தவின் கவனத்திற்கு கொண்டுவந்தனர்.

இன்றோ, எம்பலவத்த கிராம மக்களின் நீண்டகால எதிர்பார்ப்பு ஈடேறியது.

மஹியங்கனை - வேவத்த, எம்பலவத்த பதுளை மாவட்டத்திலுள்ள அழகிய கிராமமாகும்.

கிராமம் அழகாக காட்சியளித்தாலும் இங்கு வாழும் மக்களின் வாழ்க்கை இனிமையானதாய் அமையவில்லை. 

நாளாந்தம் கிராமத்திலிருந்து நகரத்திற்கு செல்லும்போது பெரும் சிரமத்திற்கு மத்தியில் ஆற்றைக் கடக்க வேண்டிய நிலை அவர்களுக்கு ஏற்பட்டது.

மழை பெய்யும் காலங்களில் ஆபத்தும் அதிகரித்தது. 

மரக்குற்றிகளைக் கொண்டு பாலம் அமைக்கப்பட்டாலும், மழை காலங்களில் ஆற்று நீர் பெருக்கெடுப்பதால் அவர்கள் கிராமத்திற்குள் முடங்க நேர்ந்தது.

மக்களின் உயிர் ஆபத்தை கருத்திற்கொண்ட கம்மெத்த, அவர்களுக்கான பாலத்தை நிர்மாணிக்கும் பணியினை கடந்த ஒக்டோபர் மாதம் ஆரம்பித்தது.

இலங்கை விமான சேவைகள் விமானிகள் ஒன்றியம் இந்த திட்டத்திற்காக கம்மெத்தவுடன் இணைந்தது. 

சுமார் இரண்டரை மாதங்களுக்குள் இந்த கிராமத்திற்கு பாதுகாப்பான பாலத்தை நிர்மாணிக்க கம்மெத்த நடவடிக்கை எடுத்தது.

நிர்மாணப் பணிகள் பூர்த்தி செய்யப்பட்ட நிலையில், பாலம் இன்று முற்பகல் சுப வேளையில் மக்களிடம் கையளிக்கப்பட்டது.

மகா சங்கத்தினரின் ஆசியுடன் நடைபெற்ற இந்த நிகழ்வில் மஹியங்கனை பிரதேச செயலாளர் சஞ்சய வீரசிங்க, இலங்கை விமான சேவைகள் விமானிகள் ஒன்றியத்தின் தலைவர் கெப்டன் நிரஞ்சன் ஜோன்புள்ளே, பொருளாளர் கெப்டன் ஜோன் கிறிஸ்டி, ஆதிவாசிகள் தலைவர் விஷ்வ கீர்த்தி வனஸ்பதி ஊருவரிகே வன்னில எத்தோ, கம்மெத்த தலைவர் ஷெவான் டேனியல் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டிருந்தனர்.