நீதிமன்றத்திற்கு தீ வைத்த மூவருக்கு விளக்கமறியல்

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்திற்கு தீ வைத்த மூவருக்கு விளக்கமறியல்

by Staff Writer 04-01-2023 | 8:27 PM

Colombo (News 1st) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தின் அலுவலக கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த மூவரையும் எதிர்வரும் 17 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு அக்கரைப்பற்று நீதவான்  M.H.ஹம்சா இன்று உத்தரவிட்டுள்ளார்.

அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற அலுவலக கட்டடத் தொகுதிக்கு ஒப்பந்த அடிப்படையில் தீ வைத்த குற்றச்சாட்டில் மூவர் கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

அவர்களை 7 நாட்கள் தடுத்து வைத்து விசாரணைக்கு உட்படுத்த அக்கரைப்பற்று பதில் நீதவான் K.சமீம் கடந்த 29 ஆம் திகதி அனுமதி வழங்கியிருந்தார்.
  
இந்த நிலையில், சந்தேகநபர்கள் மூவரையும்  நீதவான் முன்னிலையில் இன்று ஆஜர்படுத்தியபோது, எதிர்வரும் 17 ஆம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவிடப்பட்டது.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியிருந்தது.

இதனால் நீதிமன்றத்தின் வழக்குகளுடன் தொடர்புடைய அதிகளவிலான ஆவணங்கள் அழிவடைந்தன.

இச்சம்பவம் தொடர்பில் அக்கரைப்பற்றை சேர்ந்த  24 வயதான இருவரும் 18 வயதான ஒருவரும்  கடந்த 28 ஆம் திகதி கைது செய்யப்பட்டனர்.

இவர்களில் இருவர் அக்கரைப்பற்று - பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டிருந்தனர்.

இவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணைகளில், ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை உறுதி செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

எவ்வாறாயினும், இவர்களுக்கு ஒப்பந்தத்தை வழங்கிய சந்தேகநபர் தொடர்பில் தொடர்ந்தும் விசாரணை நடைபெற்று வருவதாக பொலிஸார் குறிப்பிட்டனர்.