இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவிற்கு கடிதம்

தேர்தல் நலன்களை மாத்திரம் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை - இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜாவிற்கு கடிதம்

by Staff Writer 02-01-2023 | 6:16 PM

Colombo (News 1st) தமிழ் தேசியக் கூட்டமைப்பு பலமான இயக்கமாக தொடர்வதற்கு அவசரமாக நிறைவேற்ற வேண்டிய 03 முக்கிய விடயங்களை வலியுறுத்தும் கடிதமொன்று பங்காளிக் கட்சிகளின் தலைவர்களால், கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன் மற்றும் இலங்கை தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

மிகப்பலமான கட்டமைப்பாக திகழ்ந்த தமிழ் தேசியக் கூட்டமைப்பு பல்வேறு காரணங்களால் சிதைவடைந்து தமிழ் மக்களின் அரசியல் எதிர்காலத்தை கேள்விக்குறியாக்கும் நிலையை எட்டியுள்ளதாக தமிழீழ விடுதலை இயக்கத்தின் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் மற்றும் தமிழீழ மக்கள் விடுதலைக் கழகத்தின் தலைவர் தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோர் சுட்டிக்காட்டியுள்ளனர்.

தமிழ் தேசியப் பரப்பிலுள்ள அனைத்து தரப்பினரையும் தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் உள்வாங்கி, ஒரு பலமான கட்டமைப்பாக மாற்றமடையும் என்ற எதிர்பார்ப்பு மக்களிடையே மேலோங்கி இருந்ததாக கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

எனினும், வவுனியாவில் நடந்த தமிழரசுக் கட்சியின் செயற்குழுக் கூட்டத்தில் அறிவிக்கப்பட்ட முடிவுகளும்  கிளிநொச்சியில் வேட்பாளர்களை தெரிவு செய்வதற்காக மேற்கொள்ளப்பட்டுள்ள விளம்பரமும் தமிழ்  தேசியக் கூட்டமைப்பின் ஒற்றுமையை குழப்புவதாக சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. 

தமிழரசுக் கட்சி முக்கியஸ்தர்களின் மாறுபட்ட அறிக்கைகள் மேலும் அவற்றை உறுதிப்படுத்துவதாக குறித்த கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

தேர்தல் நலன்களை மாத்திரம் கருத்திற்கொண்டு தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாக்கப்படவில்லை எனவும்  அனைத்து தமிழ் தேசியத் தரப்பினரையும் உள்வாங்கி ஒரு பலமான அரசியல் கட்டமைப்பை உருவாக்குவது தற்போதைய காலத்தின் தேவை எனவும் குறித்த கடிதத்தில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனவே, கட்டமைப்பு பலமான இயக்கமாக தொடர்வதற்கு உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டிய 03 கோரிக்கைகளும் கடிதத்தில் வலியுறுத்தப்பட்டுள்ளன. 

1. தமிழ் தேசியக் கூட்டமைப்பிற்குள் தமிழ் தேசியப் பரப்பில் அரசியல் ரீதியாக செயற்படும் அனைத்து தரப்பினரும் உள்வாங்கப்பட வேண்டும்

2. தமிழ் தேசியக் கூட்டமைப்பு வலுவாக நிர்வாக, ஸ்தாபன ரீதியாக வரையறுக்கப்பட்டு கட்டியமைக்கப்படல் வேண்டும்

3. தமிழ் தேசியக் கூட்டமைப்பு தனக்கெனும் பொதுச் சின்னத்துடன் உத்தியோகபூர்வமாகப் பதியப்பட வேண்டும்

குறித்த விடயங்கள் நடைமுறைப்படுத்தப்படும் பட்சத்தில், அங்கத்துவக் கட்சிகளின் தனித்துவம் பேணப்படுவதுடன் தனியொரு கட்சியின் ஆதிக்கமும் நெருக்கடிகளும் தவிர்க்கப்பட்டு சுயாதீனமான, நிரந்தரமான ஒரு அரசியல் கட்டமைப்பாக தமிழ் தேசியக் கூட்டமைப்பு உருவாகும் எனவும் அந்த கடிதத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ஒரு வார காலத்திற்குள் இதற்கான ஆக்கபூர்வமான பதிலை எதிர்பார்ப்பதாக செல்வம் அடைக்கலநாதன், தர்மலிங்கம் சித்தார்த்தன் ஆகியோரால் இரா.சம்பந்தன் மற்றும் மாவை சேனாதிராஜா ஆகியோருக்கு அனுப்பப்பட்டுள்ள கடிதத்தில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.