200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

சீனாவில் பனி மூட்டத்தால் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்து

by Bella Dalima 29-12-2022 | 3:56 PM

China: சீனாவின் ஷெங்ஷூ (Zhengzhou) நகர பாலத்தில் சென்றுகொண்டிருந்த சுமாா் 200 வாகனங்கள் ஒன்றுடன் ஒன்று மோதி விபத்திற்குள்ளானதில் ஒருவர் உயிரிழந்துள்ளார்.

அந்நகரில் பனிமூட்டம் காரணமாக எதிரே செல்லும் வாகனங்கள் கண்களுக்குத் தெரியாமல் போனதால், இந்த விபத்து ஏற்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

சீனாவின் மத்திய பகுதியில் அமைந்துள்ள ஹெனான் மாகாணத்தின் ஷெங்ஷூ நகரில் ஜெங்சின் ஹுவாங்கே என்கிற மிகப்பெரிய மேம்பாலம் உள்ளது. 

நேற்று (28) காலை அதிக பனிமூட்டம் நிலவியதால் மஞ்சள் ஆற்றின் குறுக்கே செல்லும் இந்த மேம்பாலத்தில் பயணிக்க போக்குவரத்து பொலிஸார் தடை விதித்திருந்தனர். 

ஆனால், அதை பொருட்படுத்தாமல் மேம்பாலத்தின் இரு திசைகளில் இருந்தும் வாகனங்கள் தொடர்ந்து பயணித்துள்ளன. 
ஒருகட்டத்தில் முன்னால் செல்லக்கூடிய வாகனங்கள் தெரியாத அளவுக்கு பனிமூட்டம் அதிகமானது. இதனால் மேம்பாலத்தில் வேகமாக சென்ற சில கார்கள் முன்னால் சென்று கொண்டிருந்த வாகனங்கள் மீது மோதின. 

அதனை தொடர்ந்து பின்னால் வந்த கார்கள், லொறிகள் உள்ளிட்ட பல வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதின. 

பாலத்தின் இரு திசைகளில் இருந்தும் வந்த வாகனங்கள் பல பாலத்தின் நடுப்பகுதியில் அடுத்தடுத்து விபத்தில் சிக்கின.  

இந்த விபத்து குறித்த தகவல் கிடைத்ததும் 60-க்கும் மேற்பட்ட தீயணைப்பு வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று, தீவிர மீட்பு பணிகளில் ஈடுபட்டனர். 

இதன்போது, ஒருவர் உயிரிழந்த நிலையில் மீட்கப்பட்டுள்ளார். 10-க்கும் மேற்பட்டோர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டு சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளனர். 

கிட்டத்தட்ட 200 வாகனங்கள் ஒன்றோடு ஒன்று மோதி விபத்திற்குள்ளானதாக கூறப்படும் நிலையில், உயிரிழந்தவர்கள் மற்றும் காயம் அடைந்தவர்களின் எண்ணிக்கை அதிகரிக்கும் என அஞ்சப்படுகிறது.