ஒப்பந்த அடிப்படையில் பணம் பெற்று அக்கரைப்பற்று நீதிமன்ற கட்டடத்திற்கு தீ வைத்த மூவரிடம் விசாரணை

by Bella Dalima 29-12-2022 | 5:20 PM

Colombo (News 1st) அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்ற கட்டடத் தொகுதிக்கு தீ வைத்தமை தொடர்பில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களும் தடுப்புக்காவலில் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளனர்.

அக்கரைப்பற்று நீதவான் முன்னிலையில் சந்தேகநபர்கள் ஆஜர்படுத்தப்பட்ட போது, 7 நாட்களுக்கு தடுப்புக்காவலில் வைத்து விசாரணை செய்ய அனுமதி வழங்கப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

அக்கரைப்பற்றை சேர்ந்த 24 வயதான இருவரும் 18 வயதான ஒருவரும் கைது செய்யப்பட்டு தடுப்புக்காவலில் வைக்கப்பட்டுள்ளனர்.

இவர்களில் இருவர் அக்கரைப்பற்று பெரிய நீலாவணை சுனாமி வீட்டுத்திட்டத்தில் மறைந்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டதாக பொலிஸார் கூறினர்.

சந்தேகநபர்கள் ஒப்பந்தத்தின் அடிப்படையில் ஒருவரிடம் பணம் பெற்றுக்கொண்டு, நீதிமன்ற கட்டடத்தொகுதிக்கு தீ வைத்துள்ளமை விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

அத்துடன், ஒப்பந்தத்தை வழங்கிய நபரைக் கண்டறியும் நோக்கில் விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் பொலிஸார் குறிப்பிட்டனர்.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகள் அம்பாறை குற்றவியல் பிரிவு பொலிஸாரின் கீழ் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

நீதவான் நீதிமன்ற அலுவலக கட்டடத் தொகுதியில் தீ ​வைக்கப்பட்டமை தொடர்பில், பல குழுக்களை அமைத்து விசாரணைகளை முன்னெடுத்து வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

கடந்த 21 ஆம் திகதி அதிகாலை 3 மணியளவில் நீதிமன்ற கட்டடத் தொகுதியில் தீ பரவியிருந்தது.

தீயணைப்பு படையினரின் கடும் பிரயத்தனத்தின் பின்னர் தீ கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவரப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் தெரிவித்தார்.

இதன்போது, நீதிமன்றத்திலுள்ள பல ஆவணங்கள் தீக்கிரையாகியிருந்ததாக அக்கரைப்பற்று பொலிஸார் தெரிவித்தனர்.