இந்திய ரூபாவில் வர்த்தகம்: இலங்கைக்கு அனுமதி

இந்தியாவுடன் இந்திய ரூபாவில் வர்த்தகம்: இலங்கைக்கு ரிசர்வ் வங்கி அனுமதி

by Bella Dalima 17-12-2022 | 4:46 PM

Colombo (News 1st) இந்தியாவுடனான வர்த்தக நடவடிக்கைகளுக்கு இந்திய ரூபாவை பயன்படுத்துவதற்கு இலங்கை உள்ளிட்ட நாடுகளுக்கு இந்திய ரிசர்வ் வங்கி அனுமதி வழங்கியுள்ளதாக Reuters செய்தி வௌியிட்டுள்ளது. 

இதற்கமைய, இலங்கையுடனான வர்த்தக நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு இந்திய வங்கிகள் இலங்கையில் 5  'இந்திய ரூபா கணக்கு'களை திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக உள்ளக ஆவணங்களை மேற்கோள் காட்டி  செய்தி வௌியிடப்பட்டுள்ளது.  

அத்துடன், ரஷ்யாவிற்கு 12 'இந்திய ரூபா கணக்கு'களையும் மொரீஷியஸூக்கு ஒரு கணக்கினையும் திறக்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது. 

இவ்வாறு தமது வர்த்தக நடவடிக்கைகளுக்காக இந்திய ரூபாவை பயன்படுத்த தஜிகிஸ்தான், கியூபா, லக்ஸம்பர்க் மற்றும் சூடான் ஆகிய நாடுகள் இந்தியாவுடன் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும் Reuters குறிப்பிட்டுள்ளது. 

டொலர் நெருக்கடியை எதிர்கொண்டுள்ள நாடுகளை இந்த பொறிமுறைக்குள் கொண்டு வர இந்திய அரசாங்கம் எதிர்பார்த்துள்ளதாகவும் இந்திய அதிகாரிகளை மேற்கோள் காட்டி தகவல் வௌியிடப்பட்டுள்ளது. 

இந்த விடயம் தொடர்பில் கொழும்பு பல்கலைக்கழகத்தின் பொருளியல் துறை சிரேஷ்ட விரிவுரையாளர் கலாநிதி எம்.கணேசமூர்த்தி தௌிவுபடுத்தினார். 

இந்திய ரூபாவை நேரடியாக இலங்கை ரூபாவிற்கு மாற்றிக்கொள்ள உத்தியோகபூர்வமாக அனுமதி வழங்கப்பட்டால், இலங்கை மற்றும் இந்திய நாடுகளுக்கிடையிலான வர்த்தகம் இலகுபடுத்தப்படும் என அவர் குறிப்பிட்டார். 

இந்திய ரூபா வௌிநாட்டு நாணயமாகவே இலங்கையில் அங்கீகரிக்கப்படும் எனவும் இதனூடாக இந்திய ரூபா இலங்கையில் புழக்கத்திற்கு வரும் என அச்சப்பட வேண்டியதில்லை எனவும் அவர் தெரிவித்தார்.