வெட்டுக்காயங்களுக்கு உள்ளான சமூக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவிற்கு சத்திரசிகிச்சை; குற்றவாளிகளை தேடி விசாரணை

by Bella Dalima 15-12-2022 | 8:15 PM

Colombo (News 1st) சமூக ஊடக செயற்பாட்டாளர் டிலான் சேனாநாயக்கவை கூரிய ஆயுதத்தால் தாக்கி, பலத்த காயம் ஏற்படுத்திய சம்பவம் தொடர்பில் இதுவரை எவரும் கைது செய்யப்படவில்லை.

பலத்த வெட்டுக்காயங்களுக்கு உள்ளான டிலான் சேனாநாயக்க தற்போது களுபோவில போதனா வைத்தியசாலையில் சிகிச்சை பெற்று வருகிறார். 

நடிகரும் சமூக ஊடக செயற்பாட்டாளருமான டிலான் சேனாநாயக்க போராட்டக்களத்தில் முன்நின்று செயற்பட்ட ஒருவர் ஆவார்.

போராட்டக் காலத்தில் கண்ணீர்ப்புகை பிரயோகத்திற்கு உள்ளாகி அவர் இரண்டு தடவைகள் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

நுகேகொடை - பாகொடையில் உள்ள டிலான் சேனாநாயக்கவின் ஸ்டூடியோவிற்கு  முகங்களை மூடிச்சென்ற இருவர், அவரை கூரிய ஆயுதத்தால் தாக்கியுள்ளனர்.

இதுவரை கிடைத்துள்ள தகவலின் பிரகாரம், தாக்குதலை மேற்கொள்வதற்காக இருவர் முச்சக்கர வண்டியில் வருகை தந்துள்ளனர். 

இடது கையிலும் வலது காலிலும்  பலத்த வெட்டுக்காயங்களுக்குள்ளான டிலான் சேனாநாயக்க, களுபோவில  போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் சத்திரசிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டுள்ளார். 

மிரிஹானை பொலிஸார் சம்பவம்  தொடர்பில் விசாரணைகளை ஆரம்பித்துள்ளதுடன்,  இதுவரை சந்தேகநபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை. 

CCTV காணொளிகளை விசாரணை அதிகாரிகள் பரிசீலிப்பதாக நியூஸ்ஃபெஸ்டின் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.