ஜனாதிபதியை தவிர்த்து விசாரணையை தொடருமாறு உத்தரவு

உயிர்த்த ஞாயிறு தாக்குதல் வழக்கு: ஜனாதிபதியை தவிர்த்து விசாரணையை தொடருமாறு உத்தரவு

by Bella Dalima 15-12-2022 | 8:25 PM

Colombo (News 1st) ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கு எதிரான உயிர்த்த ஞாயிறு இழப்பீடு வழக்குகளை, அவர் ஜனாதிபதியாக பதவி வகிக்கும் காலப்பகுதியில் முன்னெடுக்காதிருக்குமாறு நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நுவன் தாரக்க ஹனட்டிகல இன்று உத்தரவிட்டார்.

அரசியலமைப்பின் 35/1 சரத்தின் ஏற்பாடுகளுக்கு அமைய, ஜனாதிபதிக்கு அதற்கான விடுபாட்டு உரிமை உள்ளது.

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் பாதிக்கப்பட்டவர்கள், நீர்கொழும்பு மாவட்ட நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள வழக்குகளில் இரண்டாவது பிரதிவாதியாக ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பெயரிடப்பட்டுள்ளார்.

இந்த வழக்குகளின் அனைத்து பிரதிவாதிகளுக்கும் எதிரான விசாரணைகளை ஒத்திவைக்குமாறு முன்னாள் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, முன்னாள் பாதுகாப்பு செயலாளர் ஹேமசிறி பெர்னாண்டோ, முன்னாள் பொலிஸ்மா அதிபர் பூஜித்த ஜயசுந்தர ஆகியோர் விடுத்த வேண்டுகோளை நீர்கொழும்பு மேலதிக மாவட்ட நீதிபதி நிராகரித்துள்ளார்.

ரணில் விக்ரமசிங்க தவிர்ந்த ஏனைய பிரதிவாதிகளுக்கு எதிரான வழக்கு விசாரணையை தொடருமாறும் மேலதிக மாவட்ட நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.