மனித நேயத்திற்கான தலைமைத்துவத்தை பாராட்டி அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் பெயரில் விருது அறிவிப்பு

by Bella Dalima 14-12-2022 | 9:09 PM

Colombo (News 1st) அமெரிக்காவின் பொதுமக்கள் சேவைகள் தொடர்பில் புகழ்பெற்ற கற்கை நிறுவனமான Arkansa பல்கலைக்கழகத்தின் Clinton School of Public Service  மற்றும் கம்மெத்த இணைந்து, மனித நேயத்திற்கான தலைமைத்துவத்தை பாராட்டி அமரர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் பெயரில் விருதொன்றை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்த விருது கம்மெத்த திட்டத்தின் ஸ்தாபகர் ஆர்.ராஜமகேந்திரன் அவர்களுக்கு மரியாதை செலுத்தும் வகையில் வழங்கப்படவுள்ளதுடன், இதனூடாக அன்னாரின் பண்புகள் மற்றும் கொள்கைகளை வௌிப்படுத்தும் மாணவர்கள் கௌரவிக்கப்படவுள்ளனர்.

இந்த விருது வருடாந்தம் வழங்கப்படவுள்ளதுடன், விருது பெறுபவர் வளர்ந்து வரும் உலகத் தலைவராக பாராட்டுகளை பெறவுள்ளார்.

இந்த ஒத்துழைப்பு மிகவும் பயனுள்ள தொடர்புகளை ஏற்படுத்தும் என Arkansa பல்கலைக்கழகத்தின் Clinton School of Public Service -இன் பணிப்பாளர் Nicola Driver தெரிவித்துள்ளார்.

இந்த விருது ஊடாக சாதகமான கல்வி அனுபவத்தை பிள்ளைகளுக்கு பெற்றுக்கொடுக்கவும் நிலையான சமூக மாற்றத்தை ஏற்படுத்தவும் சந்தர்ப்பம் உருவாகும் என அவர் கூறியுள்ளார்.

Clinton School of Public Service மற்றும் கம்மெத்த என்பன மூன்று வருடங்களாக ஒத்துழைப்புடன் ஒருங்கிணைந்து செயற்படுகின்றன.

இந்த ஒத்துழைப்பின் ஒரு அங்கமாக குறித்த கற்கை நிறுவனத்தின் மாணவர் குழுவொன்று இலங்கையின் கிராமப்புற பகுதிகள் தொடர்பிலான ஆய்வறிக்கையொன்றையும் தயாரித்துள்ளது.

ஆர்.ராஜமகேந்திரன் விருது ஊடாக மறைந்த ஆர்.ராஜமகேந்திரன் அவர்களின் நோக்கத்தை எதிர்கால சந்ததியினர் மத்தியில் கொண்டு செல்ல முடியும் என Clinton School of Public Service-இன் சர்வதேச செயற்றிட்டங்கள் பணிப்பாளர் Tiffany Jacob கூறியுள்ளார்.

கம்மெத்த திட்டத்தின் நோக்கம் தொடர்பாக பல்பேறு நாடுகளில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்கள் தற்போது ஆராய்ந்து வருகின்றன.