திருக்கேதீஸ்வரத்தை மீட்டு மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கருத்து

by Bella Dalima 13-12-2022 | 4:34 PM

Colombo (News 1st) மன்னாரிலுள்ள பாடல்பெற்ற திருத்தலமான திருக்கேதீஸ்வரத்தை மீட்டதன் மூலம் அங்கு இந்தியா மறுமலர்ச்சியை ஏற்படுத்தியுள்ளதாக இந்திய வௌிவிவகார அமைச்சர் கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் தெரிவித்துள்ளார். 

மகாகவி சுப்பிரமணிய பாராதியாரின் பிறந்தநாளை தேசிய மொழிகள் தினமாக இந்திய மத்திய அரசு பிரகடனப்படுத்தியதை முன்னிட்டு, காசியில் நடைபெற்ற நிகழ்வில் கலந்துகொண்டு உரையாற்றிய போதே அவர் இதனை குறிப்பிட்டார் .

பாரதியாரின் 140 ஆவது பிறந்தநாளையொட்டி பல நிகழ்வுகள் பாரதத்தில்  முன்னெடுக்கப்பட்டு வருகின்றன

பிரதமர் நரேந்திர மோடியின் அறிவுறுத்தலுக்கமைய, உத்தரபிரதேச அரசாங்கம் எதிர்வரும்  16 ஆம் திகதி  வரை பாரதியாரின் பிறந்த நாளையொட்டி, "காசி தமிழ் சங்கமம்" நிகழ்வை நடத்துகின்றது

பாரதியார் வாழ்ந்த வீடான  சிவமடத்தில் இந்த நிகழ்வு இடம்பெற்று வருகின்றது.

இந்த நிகழ்ச்சியில் உரையாற்றிய இந்திய வௌியுறவுத்துறை அமைச்சர் கலாநிதி எஸ் . ஜெய்சங்கர்  இலங்கையில் மன்னாரில் உள்ள திருகேதீஸ்வர ஆலயத்தை இந்தியா மீட்டெடுத்துள்ளதாகவும் 12 வருடங்கள் மூடப்பட்டிருந்த இந்த ஆலயத்தின் மறுமலர்ச்சி இந்தியாவின் ஆர்வத்தினால் சாத்தியமானதெனவும் தெரிவித்துள்ளார்.

இலங்கையில் மன்னாரில் உள்ள திருகேதீஸ்வரம் கோவிலை மீட்டுள்ளோம். பிரதமர் சில வருடங்களுக்கு முன்னர் சென்று அந்த ஆலயத்திற்கு சென்றிருந்தார்.12 வருடங்கள் மூடப்பட்டிருந்தது. நாம் காட்டிய ஆர்வத்தினால் அது சாத்தியமானது. பிரதமர் மோடி பதவியேற்றதன் பின்னர்  எமது கலாசாரத்தையும் மரபுரிமையையும் பாதுகாப்பதோடு,  இவ்வாறு மறுமலர்ச்சியை ஏற்படுத்துவதற்காகவும் ஒத்துழைப்பு வழங்குவதற்காகவும் வௌியுறவுதுறை அமைச்சில் ஒரு தனிப் பிரிவு அமைக்கப்பட்டுள்ளது

என  கலாநிதி சுப்பிரமணியம் ஜெயசங்கர் குறிப்பிட்டுள்ளார்.