2022ஆம் ஆண்டின் சிறந்த விஞ்ஞான தொடர்பாளருக்கான விருது சிரச ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் அசோக டயஸ் வசமானது

by Staff Writer 11-12-2022 | 9:27 PM

Colombo (News 1st) 2022ஆம் ஆண்டின் சிறந்த விஞ்ஞான தொடர்பாளருக்கான விருதை சிரச ஊடக வலையமைப்பின் பணிப்பாளர் அசோக டயஸ் இன்று(11) வெற்றிகொண்டார்

இலங்கை விஞ்ஞானிகளின் பிரதான அமைப்பான இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம் இந்த விருதை வழங்கியுள்ளது.

சிரச தொலைக்காட்சியில் வார நாட்களில் காலை 06 மணிக்கு நியூஸ்பெஸ்ட்டின் தயாரிப்பில் ஔிபரப்பாகும் 'பெத்திகட' நிகழ்ச்சி ஊடாக இலங்கை மக்கள் மத்தியில் விஞ்ஞான அறிவு மற்றும் சிந்தனைகளை ஊக்குவிப்பதற்காக வழங்கிய பங்களிப்பு இந்த விருதிற்காக கவனத்தில் கொள்ளப்பட்டது.

இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கம், மருத்துவ, விவசாய, பொறியியல், கணினி மற்றும் சமூக விஞ்ஞானம் உள்ளிட்ட துறைகளில் அறிவை மேம்படுத்துவதற்காக மேற்கொள்ளப்படுகின்ற வரவேற்கத்தக்க முயற்சிகளை கவனத்தில்கொண்டு சிறந்த விஞ்ஞான தொடர்பாளருக்கான விருதை வருடாந்தம் வழங்குகின்றது.

இன்று(11) மாலை கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பீடத்தில் நடைபெற்ற இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கத்தின் 78ஆவது வருடாந்த கூட்டத்தொடரின் ஆரம்பத்தில் அசோக டயஸுக்கு இந்த விருது வழங்கப்பட்டது.

அறிவுபூர்வமான சமூகத்திற்கு விஞ்ஞான தொடர்பாடல் என்ற தொனிப் பொருளில் இம்முறை இலங்கை விஞ்ஞான முன்னேற்ற சங்கத்தின் கூட்டத்தொடர் நடைபெற்றது.