.webp)
Colombo (News 1st) ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் கட்சியின் பொதுச்செயலாளர் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை எதிர்வரும் 25 ஆம் திகதி நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு அறிவித்து, இடைக்கால தடை உத்தரவு மற்றும் அறிவித்தல் பிறப்பிக்குமாறு கொழும்பு மாவட்ட பிரதம நீதிமன்றத்தின் நீதவான் பூர்ணிமா பரணகம அறிவித்துள்ளார்.
இவர்கள் இருவரும் வகிக்கின்ற பதவியை ஆட்சேபித்து இராஜாங்க அமைச்சர் டயனா கமகேவினால் தாக்கல் செய்யப்பட்ட மனுவினை பரிசீலனைக்கு எடுத்துக்கொண்ட போதே இந்த உத்தரவு பிறப்பிக்கப்பட்டது.
சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோரை ஐக்கிய தேசியக் கட்சியின் பதவிகளில் இருந்து நீக்குவதற்கு கட்சியின் செயலாளர் மற்றும் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க எடுத்த தீர்மானத்திற்கு எதிராக நீதிமன்றில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளதாக டயானா கமகே சுட்டிக்காட்டியுள்ளார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் உறுப்புரிமையிலிருந்து அவர்கள் விலக விரும்பவில்லை என்பதையே இது உணர்த்துவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
ஐக்கிய மக்கள் சக்தியின் யாப்பின் பிரகாரம், வேறு கட்சிகளின் உறுப்புரிமையை பெற்றவர்கள் கட்சிப் பதவிகளை வகிப்பதற்கு உரிமை இல்லை எனவும் இவர்கள் இருவரையும் கட்சி பதவிகளில் இருந்து நீக்குவதற்கான இடைக்கால தடை உத்தரவினை பிறப்பிக்குமாறும் முறைப்பாட்டாளர் சார்பில் ஆஜரான சட்டத்தரணி உதித்த இஹலஹேவா கோரியிருந்தார்.
இந்த விடயம் தொடர்பில் ஆராய்ந்த மாவட்ட நீதவான் சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்கால தடை உத்தரவினை பிறப்பிப்பதற்கான அறிவித்தல் அனுப்பப்பட்டுள்ளது.