கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என அறிவிப்பு

கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவிப்பு

by Bella Dalima 07-12-2022 | 4:17 PM

Colombo (News 1st) மன்னாரிலிருந்து காங்கேசன்துறை, திருகோணமலை, மட்டக்களப்பு மற்றும் பொத்துவில் வரையான கடற்பரப்புகளில் மறு அறிவித்தல் வரை கடற்றொழிலுக்கு செல்ல வேண்டாம் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவுறுத்தியுள்ளது.

வங்காளவிரிகுடாவின் தென்கிழக்கு கடற்பிராந்தியத்தில் உருவாகியுள்ள காற்றழுத்த தாழ்வு நிலை சூறாவளியாக வலுவடைவதால் இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

குறித்த கடற்பிராந்தியத்தில் காற்றின் வேகமானது மணித்தியாலத்திற்கு 80 கிலோமீட்டர் வரை வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.

தற்போது வடக்கு மற்றும் கிழக்கு கடற்பரப்புகளில் மீன்பிடி நடவடிக்கையில் ஈடுபடும் மீனவர்களை உடனடியாக கரைக்குத் திரும்புமாறு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை, வட மாகாணம் மற்றும் திருகோணமலை மாவட்டத்தின் சில இடங்களில் நாளைய தினம் 100 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும்  என எதிர்வுகூறப்பட்டுள்ளது.

வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களில் இடைக்கிடையே மணித்தியாலத்திற்கு 50 முதல் 60 கிலோமீட்டர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் எனவும் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.