ஜனாதிபதிக்காக சர்வதேச தரத்தில் தயாரிக்கப்பட்டுள்ள விசேட பை

by Bella Dalima 02-12-2022 | 7:10 PM

Colombo (News 1st) ஜனாதிபதியின் ஆவணங்களை கொண்டு செல்வதற்காக சர்வதேச தரத்திலான பை ஒன்று இலங்கை இராணுவத்தினரால் தயாரிக்கப்பட்டுள்ளது. 

குறித்த பையை ஜனாதிபதியிடம் உத்தியோகபூர்வமாக கையளிக்கும் நிகழ்வு ஜனாதிபதி செயலகத்தில் இன்று (02) நடைபெற்றது.

சர்வதேச தலைவர்கள் தமது சர்வதேச விஜயங்களின் போது, முக்கிய இரகசிய ஆவணங்களை எடுத்துச்செல்வதற்காக விசேட பை ஒன்றை எடுத்துச்செல்வது வழமையாகும். 

இந்த பாரம்பரியத்தை இலங்கைக்கு அறிமுகப்படுத்தும் ​நோக்கில், சர்வதேச தரத்திற்கு அமைய இவ்வாறான பையை உருவாக்கும் பணியை ஜனாதிபதி இலங்கை இராணுவத்தினருக்கு வழங்கியிருந்தார்.

ஜனாதிபதியின் விசேட பணிப்புரைக்கு அமைய, இராணுவத் தளபதியின் நேரடிக் கண்காணிப்பின் கீழ், மின் மற்றும் இயந்திர பொறியியல் பணிப்பாளர் தலைமையிலான துறைசார் நிபுணர்கள் குழுவினால் ஜனாதிபதி செயலகத்தினால் வழங்கப்பட்ட விபரக்குறிப்புகளுக்கு ஏற்ப  இந்த பை வடிவமைக்கப்பட்டுள்ளது. 

ஜனாதிபதியின் பின்னர் பதவியேற்கும் அடுத்த ஜனாதிபதி பயன்படுத்தக்கூடிய வகையில் நீடித்திருக்கும் இயலுமை கொண்ட வண்ணம் வடிவமைக்கப்பட்டுள்ள இந்த பை பாதுகாப்பாகவும் உயர்தர தோலைப் பயன்படுத்தியும் வடிவமைக்கப்பட்டுள்ளது.

ஜனாதிபதியின் கையெழுத்தை பெற்றுக்கொள்வதற்காக நாளாந்தம் பல அமைச்சுகளின் அறிக்கைகள் ஜனாதிபதி செயலகத்திற்கு கிடைப்பதாகவும் ஆவணங்களுக்காக செலவிடப்படும் பணத்தை குறைக்கும் ​நோக்கில், அனைத்து அமைச்சுகளும் இத்தகைய பைகளை பயன்படுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் இருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார். 

உயர் தர பையை இராணுவத் தளபதி கையளித்ததன் பின்னர் அதனை பார்வையிட்ட ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, பையின்  வடிவமைப்பிற்கு பங்களித்த அனைவரையும் பாராட்டினார்.