இதுவரை 8 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

வடக்கு, கிழக்கில் இதுவரை 8 இலட்சம் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளன

by Bella Dalima 22-11-2022 | 7:46 PM

Colombo (News 1st) வடக்கு, கிழக்கு மாகாணங்களில் கண்ணிவெடிகளை அகற்றும் அரசாங்கத்தின் வேலைத்திட்டத்தின் கீழ் இதுவரை 8 இலட்சத்திற்கும் அதிக கண்ணிவெடிகள் அகற்றப்பட்டுள்ளதாக BBC செய்தி வெளியிட்டுள்ளது.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் 206 சதுர கிலோமீட்டருக்கும் அதிகமான நிலப்பரப்பில் கண்ணிவெடிகள் அகற்றப்பட்டு, அவை  பொதுமக்களின் பயன்பாட்டிற்காக விடுவிக்கப்பட்டுள்ளன.

இதன் பிரகாரம், 15 சதுர கிலோமீட்டர் பரப்பளவில் கண்ணிவெடிகள் அகற்றப்பட வேண்டியுள்ளதாகவும் அந்த செய்தியில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கண்ணிவெடிகளை அகற்றும்  வேலைத்திட்டத்தின் கீழ், இதுவரை 8,70,412  சாதாரண கண்ணிவெடிகளும் 2,169 இராணுவ டாங்கி எதிர்ப்பு கண்ணிவெடிகளும் அகற்றப்பட்டுள்ளதாக BBC வௌியிட்டுள்ள செய்தியில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

2021 ஆம் ஆண்டில் நிலக்கண்ணிவெடிகள் 4.3 சதுர கிலோமீட்டர் நிலப் பகுதிகளில் அகற்றப்பட்டு, மீள்குடியேற்றம் மற்றும் அபிவிருத்தி பணிகளுக்காக விடுவிக்கப்பட்டதாக நகர அபிவிருத்தி மற்றும் வீடமைப்பு அமைச்சு தெரிவித்துள்ளது.

கிளிநொச்சி, முல்லைத்தீவு மாவட்டங்களில் மேலும் 13.5 சதுர கிலோமீட்டர்  நிலப்பகுதியில் நிலக்கண்ணிவெடிகள் அகற்றப்படவுள்ளதாக குறித்த அமைச்சு சுட்டிக்காட்டியுள்ளது.