.webp)
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியம், தொழிற்சங்கங்கள், சிவில் அமைப்புகள் உள்ளிட்ட பல்வேறு தரப்பினர் ஒன்றிணைந்து இன்று பிற்பகல் நாராஹேன்பிட்டியில் உள்ள பயங்கரவாத தடுப்புப் பிரிவிற்கு முன்பாக எதிர்ப்பில் ஈடுபட்டனர்.
பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவ செயற்பாட்டாளர்களை உடனடியாக விடுதலை செய்யுமாறு எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் வலியுறுத்தினர்.
பயங்கரவாத தடுப்புப் பிரிவை சூழவுள்ள பகுதிகளுக்கு இன்று விசேட பொலிஸ் பாதுகாப்பு வழங்கப்பட்டிருந்ததுடன், கலகத் தடுப்புப் பிரிவு மற்றும் நீர்த்தாரை பிரயோக வாகனம் என்பனவும் தயார் நிலையில் வைக்கப்பட்டிருந்தன.
பயங்கரவாத தடுப்புப் பிரிவில் தடுத்து வைக்கப்பட்டுள்ள மாணவர் செயற்பாட்டாளர்களை மேலும் 90 நாட்களுக்கு தடுத்து வைக்கும் முயற்சி உள்ளதாக எதிர்ப்பில் ஈடுபட்டவர்கள் சுட்டிக்காட்டினர்.
ஒலிபெருக்கி பயன்படுத்தப்பட்டபோது அங்கு விரைந்த பொலிஸார் அதற்கு அனுமதி வழங்க முடியாது என கூறினர்.
பின்னர் மீண்டும் அவர்கள் எதிர்ப்பில் ஈடுபட்டதுடன், சிறிது நேரத்தின் பின்னர் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதேவேளை, அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே , கல்வெவ சிறிதம்ம தேரரை விடுதலை செய்யுமாறு வலியுறுத்தியும் பயங்கரவாத தடைச்சட்டத்தை நீக்குவதற்கு மத்தியஸ்தம் வகிக்கக் கோரியும் மாணவர் ஒன்றியத்தினர் சிவில் செயற்பாட்டாளர்களுடன் இணைந்து கொழும்பிலுள்ள வௌிநாட்டுத் தூதரகங்களுக்கு கடிதங்களைக் கையளித்துள்ளனர்.
கொழும்பிலுள்ள ஐக்கிய நாடுகளின் அலுவலகத்திற்கு முன்பாக சாத்வீக போராட்டத்தை முன்னெடுத்த குழுவினர் அதன் பின்னர் அதிகாரிகளிடம் மகஜரொன்றை கையளித்தனர்.
குறித்த குழுவினர் நோர்வே தூதுவராலயத்திற்கு சென்று தமது கோரிக்கையை முன்வைத்தனர்.
கொழும்பிலுள்ள ஐரோப்பிய ஒன்றியத்தின் அலுவலகத்திலும் அவர்கள் கடிதமொன்றைக் கையளித்தனர்.
அதன்பின்னர் பிரித்தானிய உயர்ஸ்தானிகராலயத்திற்கு முன்பாக அமைதியான முறையில் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
அமெரிக்கத் தூதரகத்திலும் கனடா உயர்ஸ்தானிகராலயத்திலும் போராட்டக்காரர்கள் மகஜர் கையளித்தனர்.
அதன் பின்னர் குறித்த குழுவினர் இந்திய உயர்ஸ்தானிகராலயத்திற்கு சென்று கடிதத்தை கையளிப்பதற்கு மேற்கொண்ட முயற்சி பலனளிக்கவில்லை.