ஆர்ப்பாட்டத்திற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை - UNP

ஷஷி ஹெட்டியாரச்சி கலந்துகொண்ட சீன தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்திற்கும் கட்சிக்கும் தொடர்பில்லை - ஐக்கிய தேசிய கட்சி

by Staff Writer 13-11-2022 | 3:05 PM

Colombo (News 1st) அரசாங்கத்தின் கடன் மறுசீரமைப்பு தொடர்பில் கடந்த வெள்ளிக்கிழமை கொழும்பில் உள்ள சீனத் தூதரகத்திற்கு முன்பாக நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில், சீதாவக்க பிரதேச சபை உறுப்பினர் ஷஷி ஹெட்டியாரச்சி கலந்துகொண்டமைக்கும் கட்சிக்கும் தொடர்பில்லை என ஐக்கிய தேசியக் கட்சி தெரிவித்துள்ளது.

ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொள்கின்றமை தொடர்பில் தம்மிடமோ அல்லது கட்சியிடமோ ஆலோசனை பெறப்படவில்லை என ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் பாலித்த ரங்கே பண்டார விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இலங்கையில் கடன் மறுசீரமைப்பு விவகாரம் எந்தவொரு அரசியல் கட்சியின் அல்லது எந்தவொரு தனிநபரின் பிரச்சினை அல்லவென ஐக்கிய தேசியக் கட்சியின் பொதுச் செயலாளர் வலியுறுத்தியுள்ளார்.

நிதி அமைச்சு இராஜதந்திர மட்டத்தில் முன்னெடுக்கும் நடவடிக்கைகளில் கட்சி என்ற வகையில் அதனுடன் தொடர்புபடாது என அவர் குறிப்பிட்டுள்ளார்.

கட்சிக்கு அறிவிக்காது, ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமைக்காக ஷஷி ஹெட்டியாரச்சிக்கு எதிராக எடுக்கப்படும் நடவடிக்கை குறித்து கட்சியின் நிர்வாக சபை தீர்மானிக்கும் என பாலித்த ரங்கே பண்டார தெரிவித்துள்ளார்.