நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6 பேர் பலி

நேபாளத்தில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்; 6 பேர் பலி

by Bella Dalima 09-11-2022 | 4:21 PM

Nepal: நேபாளத்தில் இன்று (09) அதிகாலை 6.3 ரிக்டர் அளவில்  சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. 

இந்த நிலநடுக்கம் டெல்லியிலும் உணரப்பட்டுள்ளது. 

மேற்கு நேபாளத்தின் டோட்டி மாவட்டத்தில் இன்று அதிகாலை 1.57 மணியளவில் 6.3 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது.  

இந்த நிலநடுக்கத்தால் 10-இற்கும் மேற்பட்ட வீடுகள் இடிந்து வீழ்ந்ததில் இதுவரை 6 பேர் பலியாகியுள்ளனர். சிலர் சிகிச்சைகளுக்காக மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். 

மேலும், இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்கும் பணியில் நேபாள இராணுவ வீரர்கள் ஈடுபட்டுள்ளதாக தகவல் வௌியாகியுள்ளது. 

24 மணிநேரத்தில் நேபாளத்தில் ஏற்பட்ட மூன்றாவது நிலநடுக்கம் இதுவாகும். முன்னதாக, நேற்று அதிகாலை 4.37 மணியளவிலும், இரவு 8.52 மணியளவிலும் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டிருந்தது.

இந்நிலையில், நேபாளத்தில் ஏற்பட்ட சக்திவாய்ந்த நிலநடுக்கமானது டெல்லி மற்றும் நொய்டா, ஹரியானா உள்ளிட்ட பகுதிகளிலும் இன்று அதிகாலை உணரப்பட்டதாக பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 

கட்டடங்கள் குலுங்கியதால் மக்கள் வீதியில் தஞ்சமடைந்துள்ளனர்.