.webp)
Colombo (News 1st) நாட்டில் குரங்கு அம்மை (Monkeypox)தொற்றுக்குள்ளான இரண்டாவது நபர் அடையாளம் காணப்பட்டுள்ளார்.
துபாயில் இருந்து நாடு திரும்பிய ஒருவருக்கே தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
குறித்த நபர் சிகிச்சைகளுக்காக கொழும்பு தேசிய வைத்தியசாலைக்கு நேற்று (08) சென்றுள்ளார்.
இந்நிலையில், அவர் தேசிய வைத்தியசாலையிலிருந்து IDH வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டதாக சுகாதார அமைச்சு தெரிவித்தது.
அங்கு முன்னெடுக்கப்பட்ட பரிசோதனையில், குறித்த நபருக்கு குரங்கு அம்மை தொற்று உறுதி செய்யப்பட்டதாக சுகாதார அமைச்சின் உயர் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இலங்கையில் முதலாவது குரங்கு அம்மை தொற்றாளர் கடந்த 04 ஆம் திகதி அடையாளங்காணப்பட்டார்.
துபாயிலிருந்து நாட்டை வந்தடைந்த 20 வயதான இளைஞர் ஒருவருக்கே தொற்று உறுதிப்படுத்தப்பட்டது.
உலக சுகாதார ஸ்தாபனத்தின் தரவுகளின் பிரகாரம், உலகளாவிய ரீதியில் நேற்று வரை 78,599 குரங்கு அம்மை தொற்றாளர்கள் அடையாளங்காணப்பட்டுள்ளனர். தொற்றுக்குள்ளான 44 பேர் உயிரிழந்துள்ளனர்.
உலக சுகாதார ஸ்தாபனத்தினால் குரங்கு அம்மை தொற்று தொடர்பில் கடந்த ஜூலை மாதம் அவசர நிலை அறிவிக்கப்பட்டது.