வாழ்வாதார அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ள இந்திய வம்சாவளி இலங்கை தொழிலாளர்கள்

by Bella Dalima 04-11-2022 | 5:29 PM

Colombo (News 1st) TANTEA எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தின் கீழ் பணியாற்றும் இந்திய வம்சாவளி இலங்கை தொழிலாளர்கள் வாழ்வாதார அச்சுறுத்தலை எதிர்நோக்கியுள்ளனர். 

1964  ஆம் ஆண்டு  ஶ்ரீமா - சாஸ்திரி ஒப்பந்தத்திற்கமைய, நாட்டிலிருந்து பாரதம் திரும்பிய மக்களின் மறுவாழ்விற்காக தமிழகத்தின் நீலகிரி , கோவை மாவட்டங்களில் TANTEA எனப்படும் தமிழ் நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகம் உருவாக்கப்பட்டது. 

இதன் கீழ்  2245 குடும்பங்களை சேர்ந்த 9,000 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கப்பட்டதுடன், குடியிருப்பு வசதிகளும் ஏற்படுத்திக் கொடுக்கப்பட்டன.

தற்போது இங்கு சுமார்  4500 தொழிலாளர்கள் பணிபுரிந்து வரும் நிலையில், குறித்த நிறுவனத்திற்கு ஏற்பட்ட நட்டத்தினால் 11,000 ஏக்கர் கொண்ட  தேயிலைத் தோட்டங்களில் 5317 ஏக்கரை வனத்துறைக்கு ஒப்படைக்க தமிழக அரசு அரசாணை பிறப்பித்துள்ளது. 

இதனிடையே, TANTEA எனப்படும் தமிழ்நாடு அரசு தேயிலைத் தோட்டக் கழகத்தின் கீழ் பணியாற்றும், 2245 நிரந்தரத் தொழிலாளர்களின் குடும்பங்களுக்கு தலா இரண்டு ஏக்கர் வீதம் தேயிலைத் தோட்டங்களை குத்தகைக்கு வழங்கினால் பயனுள்ளதாக அமையுமென கூடலூர் சட்டமன்ற  தொகுதி  உறுப்பினர் பொன்.ஜெயசீலன் தெரிவித்துள்ளார். 

இந்த விடயம் தொடர்பில் இலங்கை தொழிலாளர் காங்கிரஸின் தலைவர் செந்தில் தொண்டமானுக்கு எழுதியுள்ள கடிதத்திலேயே பொன்.ஜெயசீலன் இதனை தெரிவித்துள்ளார். 

பாரத பிரதமர் , தமிழக அரசியல் தலைவர்கள் மாத்திரமின்றி  தேசிய அளவில் பல்வேறு அரசியல் கட்சி  தலைவர்களுடன் உள்ள தொடர்பினைப் பயன்படுத்தி இந்த விடயத்தில் தலையிட்டு  மக்களின் வாழ்வாதாரம், உரிமைகளைக் காத்திட உதவுமாறு பொன். ஜெயசீலன் செந்தில் தொண்டமானிடம்  கோரியுள்ளார்.