.webp)
Colombo (News 1st) யானை - மனித மோதல்கள் தொடர்ச்சியாக பதிவாகி வரும் நிலையில், இன்று அதிகாலை மட்டக்களப்பு - செங்கலடியில் யானையிடமிருந்து ஒரு குடும்பம் மயிரிழையில் உயிர் தப்பியுள்ளது.
செங்கலடி பிரதேச செயலாளர் பிரிவிற்குட்பட்ட உறுகாமம் கிராமத்திற்குள் இன்று அதிகாலை 2 மணியளவில் நுழைந்த காட்டு யானை, வீடு ஒன்றை உடைத்து நாசம் செய்துள்ளது.
இதன்போது, வீட்டினுள் இரண்டு சிறுவர்களும் வயோதிப பெண்மணியும் உட்பட நான்கு பேர் இருந்துள்ளனர்.
குறித்த யானை வீட்டின் கதவினை உடைக்க முற்பட்டதையடுத்து, வீட்டில் இருந்தவர்கள் பெரும் சிரமத்திற்கு மத்தியில் பின்புறமாக தப்பிச்சென்று அயல் வீட்டில் தஞ்சமடைந்துள்ளனர்.
தொடர்ச்சியாக வீட்டினை நாலாப்பக்கமும் சேதப்படுத்திய யானை, வளவில் நின்றிருந்த தென்னை மற்றும் வாழை மரங்களையும் துவம்சம் செய்துள்ளது.
கிராமத்தவர்கள் இணைந்து கூச்சலிட்டு அதிகாலை 4 மணியளவில் யானையை விரட்டியுள்ளனர்.
இதேவேளை, செங்கலடி கறுத்தப் பாலத்திற்கு அருகே உள்ள வயல் நிலங்களும் காட்டு யானைகளின் அட்டகாசத்தினால் அழிவடைந்து வருவதாக விவசாயிகள் கவலை தெரிவித்தனர்.
நேற்றிரவு சுமார் 9.30 மணியளவில் வயல் நிலங்களில் நுழைந்த காட்டு யானையை விரட்டும் முயற்சியில் விவசாயிகள் ஈடுபட்டுள்ளனர்.
இதனிடையே, பலாங்கொடை பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட தியவின்ன பகுதிக்குள் நேற்று இரவு நுழைந்த நான்கு காட்டு யானைகள் அங்குள்ள மரங்களை சேதப்படுத்தி சென்றுள்ளதுடன், விவசாய நிலங்களையும் சேதப்படுத்தியுள்ளன.