.webp)
Colombo (News 1st) நாட்டை அண்மித்த வளிமண்டலத்தில் ஏற்பட்டுள்ள தாழமுக்க நிலை வலுவடைவதால், மழையுடன் கூடிய வானிலை நீடிக்கும் சாத்தியம் உள்ளதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
மேல், சப்ரகமுவ, மத்திய, வடமேல், ஊவா மற்றும் வடக்கு மாகாணத்தின் சில பகுதிகளில் 150 மில்லிமீட்டருக்கும் அதிகமான பலத்த மழைவீழ்ச்சி பதிவாகலாம் என திணைக்களம் எதிர்வுகூறியுள்ளது.
ஏனைய பகுதிகளிலும் 100 மில்லிமீட்டர் வரை மழை வீழ்ச்சி பதிவாகலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இடியுடன் கூடிய மழை பெய்யும் போது பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், இடி மின்னலினால் ஏற்படும் பாதிப்புகளை குறைத்துக் கொள்ள தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு மக்கள் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.
மழையுடன் கூடிய வானிலையால் வடமேல், ஊவா மற்றும் மத்திய மாகாணங்களில் 21 குடும்பங்களை சேர்ந்த 65 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், இதுவரை 18 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
பண்டாரவளை, ஹம்பராவ பகுதியில் ஏற்பட்ட மண்சரிவில் சிக்கி ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், பெண் ஒருவர் காயமடைந்துள்ளார். 73 வயதான ஒருவரே சம்பவத்தில் உயிரிழந்தார்.
இதேவேளை, பதுளை மாவட்டத்தின் பசறை பிரதேச செயலகத்திற்குட்பட்ட பகுதிகளுக்கு சிவப்பு மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
இதனை தவிர, பதுளை - எல்ல, கண்டி - கங்க இஹல கோரள, மொனராகலை - படல்கும்புர ஆகிய பகுதிகளுக்கு எச்சரிக்கையுடன் செயற்படுவதற்கான இரண்டாம் கட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பதுளை, கண்டி, கேகாலை, குருநாகல், மாத்தறை, மொனராகலை, நுவரெலியா, இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு விடுக்கப்பட்ட மண்சரிவு அபாய எச்சரிக்கை நாளை பிற்பகல் வரை நீடிக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாக பல நீர்த்தேக்கங்களின் வான் கதவுகள் திறக்கப்பட்டுள்ளன.
விக்டோரிய நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் இன்று காலை முதல் திறக்கப்பட்டுள்ளன.
காசல்ரீ மற்றும் மவுசாகலை நீர்த்தேக்கங்களின் நீர்மட்டமும் அதிகரித்துள்ளது.
இதனிடையே, குங்குலேகங்க நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் அவசரமாக திறக்கப்பட்டுள்ளதால் திடீரென வௌ்ளம் ஏற்படக்கூடும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் நீர்த்தேக்கத்தை அண்மித்த தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களை அவதானத்துடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மத்திய மலைநாட்டின் மேற்கு சரிவுகளில் நேற்று முதல் இடைக்கிடையே மழை பெய்து வருவதுடன் பனிமூட்டமும் காணப்படுகின்றது. இதனால் எச்சரிக்கையுடன் செயற்படுமாறு வாகன சாரதிகளுக்கு பொலிஸார் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
யாழ்ப்பாணம், திருகோணமலை, கண்டி, நுவரெலியா மாவட்டங்களிலும் தொடர்ச்சியாக மழை பெய்து வருவதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர்கள் தெரிவித்தனர்.