சுகாதார பாதிப்பிற்கு முகங்கொடுக்கும் ஆசிய மக்கள்

பாரிய சுகாதார அச்சுறுத்தல்களுக்கு முகங்கொடுக்கும் ஆசிய மக்கள்

by Bella Dalima 27-10-2022 | 7:39 PM

Colombo (News 1st) ஆசிய நாடுகளில் மழையின் பின்னரான வௌ்ள நிலைமை மக்களுக்கு பாரிய சுகாதார அச்சுறுத்தல்களை தோற்றுவித்துள்ளதாக சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. 

ஆசியாவில் இந்த வருட பருவப்பெயர்ச்சியினால் கடந்த ஆகஸ்ட் மாதத்தில் இருந்து  இதுவரை 42 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் வௌ்ளம் மற்றும் மண்சரிவால் பாதிக்கப்பட்டுள்ளனர். 

இலங்கை, பங்களாதேஷ்,  நேபாளம்,  பாகிஸ்தான், தாய்லாந்து,  வியட்நாம், லாவோ, கம்போடியா ஆகிய நாடுகளில் உள்ள 42  மில்லியன் மக்கள் இதில் அடங்குகின்றனர். 

தேங்கிய நீரினால் நுளம்புகளின் இனப்பெருக்கம் அதிகரிப்பதுடன், பாக்டீரியா உள்ளிட்ட கிருமிகளின் தாக்கமும் அதிகரிப்பதாக செஞ்சிலுவை சங்கத்தின் சுகாதாரம், அனர்த்தம் , காலநிலை மற்றும் நெருக்கடிக்கான பிராந்திய தலைமை அதிகாரி  தெரிவித்துள்ளார். 

மழையின் பின்னரான வௌ்ளத்தினால் ஆசிய நாடுகளில் மலேரியா, டெங்கு, காலரா, வயிற்றோட்டம் போன்ற நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் அதிகளவில் பதிவாகியுள்ளதாகவும் சர்வதேச செஞ்சிலுவை சங்கம் தெரிவித்துள்ளது. 

இதேவேளை, வருடத்தின்  இதுவரையான காலப்பகுதியில் நாட்டில்  60 பேர் டெங்குக் காய்ச்சலால் உயிரிழந்துள்ளனர். 

கடந்த வருடத்தில் 25,067 பேர் டெங்கு தாக்கத்திற்கு உள்ளாகியதுடன், வருடத்தின் இதுவரையான காலப்பகுதியில் மாத்திரம் 62 ஆயிரத்திற்கும் மேற்பட்ட டெங்கு நோயாளர்கள் பதிவாகியுள்ளனர்.

கடந்த வருடத்துடன் ஒப்பிடுகையில், இந்த எண்ணிக்கை மூன்று மடங்கு அதிகரிப்பு என தேசிய டெங்கு ஒழிப்புப் பிரிவு தெரிவித்துள்ளது. 

நிலவும் மழையுடனான வானிலையால் டெங்கு காய்ச்சல் வேகமாக பரவக்கூடும் என்பதால், நுளம்புகள் பெருகும் வகையில் சூழலை வைத்திருக்க வேண்டாம் என சுகாதாரத் தரப்பினர் கேட்டுக்கொண்டுள்ளனர். 

இதனிடையே, நாட்டில் இதுவரையான காலப்பகுதியில்  4,600 பேர் லெப்டோஸ்பிரோசிஸ் (Leptospirosis)நோயினால் பாதிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சின் தொற்றுநோய் விஞ்ஞானப் பிரிவு தெரிவித்துள்ளது.   

மழை வௌ்ளத்தால் பரவுகின்ற மற்றுமொரு நோய் லெப்டோஸ்பிரோசிஸ் ஆகும்.