.webp)
Colombo (News 1st) போதைப்பொருள் பாவனைக்கு எதிர்ப்பு தெரிவித்து யாழ்ப்பாணத்தில் இன்று விழிப்புணர்வு பேரணியொன்று முன்னெடுக்கப்பட்டது.
தெல்லிப்பளை துர்க்கை அம்மன் கோவில் வளாகத்தில் இருந்து தெல்லிப்பளை பஸ் நிலையம் வரை மக்கள் பேரணியாக சென்றனர்.
வடக்கில் அதிகரித்து வரும் போதைப்பொருள் பாவனைக்கு விரைவில் முற்றுப்புள்ளி வைக்க வேண்டும் என அவர்கள் வலியுறுத்தினர்.
வட மாகாண மாணவர்களின் கல்வி வளர்ச்சியை நசுக்கும் செயற்பாடாக போதைப்பொருள் பாவனை திட்டமிட்டு விதைக்கப்பட்டுள்ளதாக அவர்கள் குற்றம் சாட்டினர்.
இலங்கை கடற்படை தகவல்களின் படி 2013 ஆம் ஆண்டில் இருந்து 2022 ஆம் ஆண்டு செப்டம்பர் வரையான காலப்பகுதியில் வடக்கு கடற்பரப்பில் 30.41 கிலோகிரேம் ஹொரோயின் கைப்பற்றப்பட்டுள்ளது.
குறித்த காலப்பகுதியில் வடக்கு கடற்பகுதியில் 14195.52 கிலோகிராம் கேரள கஞ்சா மீட்கப்பட்டுள்ளது.
அத்துடன், 4.15 கிலோகிராம் ஐஸ் போதைப்பொருளும் வடக்கு கடற்பிராந்தியத்தில் சுற்றிவளைப்புகளின் போது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
வடக்கில் இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை பாதுகாப்பு தரப்பினால் ஏன் முழுமையாகக் கட்டுப்படுத்த முடியவில்லை எனும் கேள்வி எழுகின்றது.
எனினும், கடல் மார்க்கமாக இடம்பெறும் போதைப்பொருள் கடத்தலை தடுப்பது தொடர்பில் அதிகக் கவனம் செலுத்தியுள்ளதாக இலங்கை கடற்படை தெரிவித்தது.
போதைப்பொருள் கடத்தலை தடுத்தல், சட்டவிரோத குடியேற்றங்களைத் தடுத்தல் என்பவற்றுக்காக விசேட கப்பல்களையும் படகுகளையும் தினமும் ரோந்து சேவையில் ஈடுபடுத்தியுள்ளதாகவும் கடற்படை குறிப்பிட்டது.
போர்க் காலத்தை விட வடபுல சமூகத்தில் அதிகமான போதைப்பொருள் பாவனை தற்போது அவதானிக்கப்படுவதாகவும் கட்டுப்படுத்தப்பட்ட சமூகமாக, நேரிய பாதையில் பயணிக்கும் சமூகமாக வழிப்படுத்தப்பட்டிருந்த சமூகத்திற்குள் புற்றுநோயாக போதைப்பொருள் பாவனை வந்து சேர்ந்துள்ளதாகவும் யாழ். பல்கலைக்கழகத்தின் ஊடகத்துறை தலைவர் பேராசிரியர் எஸ். ரகுராம் தெரிவித்தார்.
போதைப்பொருள் பாவனையை சட்ட ரீதியாக கட்டுப்படுத்த வேண்டியவர்கள் அதனை ஊக்குவிக்கும் நிலை காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.