.webp)
Colombo (News 1st) T20 உலகக்கிண்ணத்தில் மெல்போர்னில் இன்று இடம்பெற்ற போட்டியில், Group-1 பிரிவில் இங்கிலாந்து-அயர்லாந்து அணிகள் மோதின.
மழையால் போட்டி ஆரம்பிப்பது பாதிக்கப்பட்டது. எனினும் மழை விட்ட பின்னர் 45 நிமிடங்கள் தாமதமாக போட்டி ஆரம்பித்தது. ஆனாலும், ஓவர்கள் குறைக்கப்படவில்லை.
இங்கிலாந்து அணித்தலைவர் Jos Buttler நாணய சுழற்சியில் வென்று, பந்துவீச்சை தெரிவு செய்தார்.
அயர்லாந்து அணித்தலைவர் Andrew Balbirnie மற்றும் Paul Stirling ஆகியோர் ஆரம்ப துடுப்பாட்ட வீரர்களாக களமிறங்கினர்.
ஆட்டத்தின் முதல் ஓவரில் அயர்லாந்து அணியால் 3 ஓட்டங்களே எடுக்க முடிந்தது. 2-வது ஓவர் வீசப்பட்ட போது மீண்டும் மழை பெய்ததால் ஆட்டம் பாதிக்கப்பட்டது. 9 பந்துகள் வீசப்பட்ட நிலையில், மழையால் ஆட்டம் மீண்டும் தடைபட்டது.
மழை விட்டதும் மீண்டும் ஆட்டம் தொடங்கியது. Andrew Balbirnie சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஓட்டங்களை சேர்த்தார்.
அயர்லாந்து அணி 19.2 ஓவரில் 157 ஓட்டங்களுடன் அனைத்து விக்கெட்களையும் இழந்தது.
Andrew Balbirnie அதிகபட்சமாக 47 பந்தில் 62 ஓட்டங்களும் (5 பவுண்டரி, 2 சிக்சர்), Lorcan Tucker 27 பந்தில் 34 ஓட்டங்களும் (3 பவுண்டரி, 1 சிக்சர்) எடுத்தனர்.
இங்கிலாந்து தரப்பில் Mark Wood மற்றும் Liam Livingstone தலா 3 விக்கெட்களும் Sam Curran 2 விக்கெட்டும் Ben Stokes ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.
இங்கிலாந்து 158 ஓட்டங்களை இலக்காகக் கொண்டு ஆட்டத்தை ஆரம்பித்தது.
அணித்தலைவரும் தொடக்க வீரருமான Jos Buttler முதல் ஓவரில் ஒட்டம் எதுவும் எடுக்காமல் ஆட்டம் இழந்தார்.
அடுத்து வந்த Alex Hales 7, Ben Stokes 6, Harry Brook 18, Dawid Malan 35 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தனர்.
இதனால் இங்கிலாந்து அணி 13.1 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 86 ஓட்டங்களை எடுத்தது. இதனையடுத்து, Moeen Ali மற்றும் Liam Livingstone ஜோடி சேர்ந்தனர். Moeen Ali அதிரடியாக விளையாடி 12 பந்தில் 24 ஓட்டங்கள் குவித்து களத்தில் இருந்தார்.
இதன்போது, மழை குறுக்கிட்டது. இங்கிலாந்து அணி 14.3 ஓவரில் 5 விக்கெட்களை இழந்து 105 ஓட்டங்களை எடுத்திருந்தது. இதனால் Duckworth–Lewis–Stern முறைப்படி அயர்லாந்து 5 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதாக அறிவிக்கப்பட்டது.
இதனிடையே, சுப்பர்-12 சுற்றில் நியூஸிலாந்து மற்றும் ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டி மழை காரணமாக கைவிடப்பட்டுள்ளது.
இரு அணிகளுக்கும் தலா ஒரு புள்ளி வழங்கப்பட்டுள்ளது.
புள்ளிப் பட்டியலில் நியூசிலாந்து 3 புள்ளிகளுடன் முன்னிலையில் உள்ளது.
இலங்கை அணி 2 புள்ளிகளுடம் இரண்டாம் இடத்தில் உள்ளமை குறிப்பிடத்தக்கது.