தீபாவளி வாழ்த்து செய்திகள்

தீபாவளி வாழ்த்து செய்திகள்

by Staff Writer 24-10-2022 | 2:49 PM

Colombo (News 1st) ஒளியால் மட்டுமே இருளை நீக்க முடியும். அதேபோன்று தாய் நாட்டை முன்னொருபோதும் இல்லாதவிதத்தில் சூழ்ந்திருக்கும் இருளை விரட்டி, ஒளிமயமான எதிர்காலத்தை உருவாக்க அனைவரும் ஒற்றுமையுடன் இணைந்து செயற்பட வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார். 

இனம், மதம், கட்சி, நிறம் என்ற பிரிவினையின்றி, நம்வாழ்விலும் நாட்டிலும் சூழ்ந்திருக்கும் இருளை
நீக்க வேண்டும் என ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.

இதனை குறிக்கோளாகக் கொண்டு, நாட்டை கட்டியெழுப்ப வேண்டும் எனவும் இதற்கு அனைவரும் கைகோர்த்துக்கொள்ள வேண்டும் எனவும் தீபத்திருநாளில் ஜனாதிபதிஅனைவரிடமும் கேட்டுக்கொண்டுள்ளார்.

இம்முறை தீபாவளிப் பண்டிகையானது அனைவரது அபிலாஷைகளையும் பூர்த்தி செய்து, இலங்கையை சௌபாக்கியம் நிறைந்த நாடாக உருவாக்கும் சிறந்த எதிர்காலத்தின் தொடக்கமாக அமைய வேண்டுமென பிரார்த்திப்பதாகவும் தமது வாழ்த்து செய்தியில் மேலும் ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.

பிரிவினைக்கு ஆயிரம் காரணங்களை உருவாக்கினாலும், கட்சி, நிற, மத, இன பேதங்களை ஒதுக்கி, பொது அக்கறையுடன் செயற்பட வேண்டிய காலகட்டத்தை இன்று நாம் அடைந்துள்ளதாக பிரதமர் தினேஷ் குணவர்தன தமது வாழ்த்து செய்தியில் கூறியுள்ளார்.

தீபாவளிப் பண்டிகையைக் கொண்டாடும் இத்தருணத்தில், தீபாவளியின் உண்மையான அர்த்தத்தை மனதில் இருத்தி, பொதுநலனுக்காக ஒன்றிணைந்து செயற்பட்டு, இந்த சவாலான நேரத்தை எதிர்கொள்ள உறுதியெடுத்தல் வேண்டும் எனவும் பிரதமர் வலியுறுத்தியுள்ளார்.

ஆன்மீக இருளுக்கு எதிரான ஒளியின் வெற்றி, தீமையை அழித்து நன்மை, அறியாமையிலிருந்து அறிவொளி" என்பனவற்றைக் குறிக்கும் தீபாவளி பண்டிகையை அர்த்தமுள்ளதாக்கி, தனிமனித வெற்றியை விட பொதுவான ஆன்மீக முன்னேற்றத்தின் வெற்றியில் அனைவரும் ஒன்றிணைவோம் என பிரதமர் விடுத்துள்ள தீபாவளி வாழ்த்துச் செய்தியில் தெரிவித்துள்ளார்.

தீமையை தோற்கடித்து நன்மை கிடைத்த நன்னாளான இன்றைய தீபாவளி தினத்தில், நாட்டில் தற்போதுள்ள ஆபத்தான சூழ்நிலைமையை தோற்கடித்து நாட்டை கட்டியெழுப்ப அனைவரும் பிரார்த்தனை செய்வோம் என எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச தீபாவளி தினத்தில் கேட்டுக் கொண்டுள்ளார்.

இலங்கை மக்களிடையே நல்லிணக்கத்தையும்,பரஸ்பர புரிந்துணர்வையும் உருவாக்க இந்த அற்புதமான நன்னாள் பெரும் பங்களிப்பை வழங்குகிறது. 

அனைவரினதும் வெறுப்பும் கோபமும் நீங்கி, மனித நல்லிணக்கம் நிறைந்த இலங்கையில் சுதந்திரமாகவும் நல்லிணக்கத்துடனும் சமாதானத்துடனும் வாழ தீபத்திருநாள் அனைவருக்கும் உறுதுணையாக அமையட்டும் எனவும் எதிர்க்ட்கட்சி தலைவர் வாழ்த்து தெரிவித்துள்ளார்.