முதல் வெற்றியைப் பெற்றது ஐக்கிய அரபு இராச்சியம்

T20 உலகக்கிண்ணம்: முதல் வெற்றியை பதிவு செய்தது ஐக்கிய அரபு இராச்சியம், சுப்பர்-12 வாய்ப்பை இழந்தது நமீபியா

by Bella Dalima 20-10-2022 | 5:45 PM

Colombo (News 1st) T20 உலகக்கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றுப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் தனது முதல் வெற்றியை பதிவு செய்துள்ளது. 

நமீபியாவிற்கு எதிரான இந்தப் போட்டியில் ஐக்கிய அரபு இராச்சியம் 7 ஓட்டங்களால் வெற்றி பெற்றது. 

நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஐக்கிய அரபு இராச்சியம் 20 ஒவர்கள் முடிவில் 3 விக்கெட் இழப்பிற்கு 148 ஓட்டங்களைக் குவித்தது. 

அதிரடியாக ஆடிய ஆரம்ப துப்பாட்ட வீரர் Muhammad Waseem  50 ஓட்டங்களை விளாசினார். Vriitya Aravind 21 ஓட்டங்கள் சேர்த்தார். அணித்தலைவர் Chundangapoyil Rizwan 43 ஓட்டங்களுடனும், Basil Hameed  25  ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர். 

இதையடுத்து, 149 ஓட்டங்களை வெற்றி இலக்காகக் கொண்டு களமிறங்கிய நமீபியா  16 ஓட்டங்களுக்குள் 2 விக்கெட்களை இழந்தது. 

நமீபியாவின் ஆரம்ப துப்பாட்ட வீரர்களான Michael van Lingen  10 ஓட்டங்களுடனும் Stephan Baard  4 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர். 

Jan Nicol  ஒரு ஓட்டத்துடனும், Gerhard Erasmus 16 ஓட்டங்களுடனும், Jan Frylinck  14 ஓட்டங்களுடனும், JJ Smit  3 ஓட்டங்களுடனும், Zane Green 2 ஓட்டங்களுடனும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தனர். 

அதேசமயம், பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்திய David Wiese, அரைச்சதம் கடந்து நம்பிக்கை அளித்தார். அவருடன் Ruben Trumpelmann இணைய, அணியின் ஓட்ட எண்ணிக்கை உயர்ந்தது. ஆட்டத்தின் கடைசி ஓவரில் 14 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், முதல் 3 பந்துகளில் 4 ஓட்டங்களை மட்டுமே எடுத்த நிலையில், 4 ஆவது பந்தில் Wiese ஆட்டமிழந்தார். அவர் மொத்தம் 55 ஓட்டங்களை சேர்த்திருந்தார். 

Wiese ஆட்டமிழந்ததால் ஆட்டம் ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு சாதகமாக திரும்பியது. அடுத்த இரண்டு பந்துகளில் ஒரு ஓட்டம் மட்டுமே எடுத்ததால், நமீபியா அணி 20 ஓவர் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 141 ஓட்டங்களை மாத்திரமே எடுத்தது. 

இதனால் ஐக்கிய அரபு அமீரகம் 7 ஒட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. 

இதன்மூலம் T20 உலகக்கிண்ண தொடரில் ஐக்கிய அரபு  இராச்சியம் முதல் வெற்றியை பதிவு செய்தது. முகமுது வாசிம் ஆட்டநாயகனாக தெரிவானார்.  

நமீபியா தோல்வியடைந்ததால், சூப்பர்-12 வாய்ப்பினை இழந்தது. 

Group A பிரிவில் முதல் இரண்டு இடங்களைப் பிடித்த இலங்கை மற்றும் நெதர்லாந்து அணிகள் சூப்பர்-12 சுற்றுக்கு முன்னேறியுள்ளன.