.webp)
Colombo (News 1st) கண்டி - கெட்டம்பே, வராதென்னவில் மகாவலி ஆற்றில் நீராடச்சென்ற இரண்டு இளைஞர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டனர்.
அவர்களில் ஒருவர் கடும் பிரயத்தனத்தின் பின்னர் காப்பாற்றப்பட்டுள்ளார்.
இளைஞர், யுவதிகள் குழுவொன்று வராதென்ன பகுதியில் மகாவலி ஆற்றில் இன்று காலை நீராடச்சென்றுள்ளனர்.
பிற்பகல் 3.50 மணியளவில் ஆற்றின் நீர் மட்டம் அதிகரித்ததால், இரண்டு இளைஞர்கள் நீரில் அடித்துச்செல்லப்பட்டதாக நியூஸ்ஃபெஸ்ட் செய்தியாளர் கூறினார்.
இதில் ஒரு இளைஞர் ஆற்றின் நடுவேயுள்ள கற்பாறையொன்றைப் பிடித்துக்கொண்டார்.
கண்டி பொலிஸ் நிலைய பொலிஸ் உயிர் பாதுகாப்பு படையினர், இராணுவத்தினர் இணைந்து அவரை காப்பாற்றுவதற்கான நடவடிக்கையை ஆரம்பித்தனர்.
சுமார் இரண்டு மணித்தியால பிரயத்தனத்தின் பின்னர் பிரதேச இளைஞர்கள் இருவரின் ஒத்துழைப்புடன் அவர் காப்பாற்றப்பட்டார்.
காணாமற்போன இளைஞரைத் தேடும் நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.