சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச்செல்வதை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ஆலோசனை

by Bella Dalima 12-10-2022 | 8:03 PM

Colombo (News 1st) சிறுவர்களை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச்செல்வதை தடுக்க விரைவில் நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க பொலிஸாருக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.

சிறுவர் உரிமைகளை பாதுகாப்பது தொடர்பில் ஜனாதிபதி செயலகத்தில் இன்று இடம்பெற்ற விசேட கலந்துரையாடலின் போது அவர் இந்த ஆலோசனையை வழங்கியுள்ளார்.

சிறுவர்களை கேடயங்களாக பயன்படுத்தி, அவர்களை பேரணிகளுக்கு அழைத்துச்செல்வது நாட்டின் சட்டத்தின் படி பாரிய தவறு என ஜனாதிபதி இதன்போது சுட்டிக்காட்டியுள்ளார்.

ஜனாதிபதி தெரிவித்ததாவது,

சிறு பிள்ளைகளை ஆர்ப்பாட்டங்களுக்கு அழைத்துச் செல்வதை நிறுத்த வேண்டி ஏற்படும். வீட்டில் எவரும் இல்லாமையால் பிள்ளைகளை அங்கு அழைத்துச் செல்லவில்லை. பிரபாகரன் செய்ததைப் போன்று  கேடயமாகவே கொண்டு செல்கின்றனர். அவ்வாறு செய்தால் அதனை நிறுத்த வேண்டி ஏற்படும். பின்னர் அனைவரும் பிள்ளைகளை அழைத்துச் செல்வர்.   பல்கலைக்கழக மாணவர்களும் பிள்ளைகளை அழைத்துச் செல்வர். அரசியலமைப்பின் 27 ஆவது சரத்தில் சிறுவர்களின் பாதுகாப்பு தொடர்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அது பாதுகாக்கப்பட வேண்டும்.  இல்லாவிட்டால் இது விளையாட்டாகிவிடும். ஒரு பிள்ளைக்காவது ஏதாவது நடந்தால் பெரிய பிரச்சினையாகிவிடும்.