.webp)
Colombo (News 1st) ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையின் பிரகாரம் உலகில் வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 54 நாடுகளின் பட்டியலில் இலங்கை உள்வாங்கப்பட்டுள்ளது.
வறுமைக் கோட்டின் கீழ் உள்ள 54 நாடுகளுக்கும் உடனடியாக கடன் மற்றும் நிவாரணங்கள் வழங்கப்பட வேண்டும் என ஐக்கிய நாடுகள் சபையின் அபிவிருத்தி திட்டம் தெரிவித்துள்ளது.
உலகில் வறுமையில் வாடும் மக்களில் அரைவாசிக்கும் மேற்பட்டவர்கள் இந்த 54 நாடுகளில் வசிப்பதாக சுட்டிக்காட்டியுள்ள ஐக்கிய நாடுகள் அபிவிருத்தி திட்டம் (UNDP), இந்த நாடுகளுக்கு அபிவிருத்தி அடைந்த நாடுகள் உடனடியாக நிவாரணம் வழங்க வேண்டும் எனவும் அவ்வாறு வழங்கப்படாவிட்டால், பாரிய கடன் நெருக்கடிக்கு முகங்கொடுக்க வேண்டி ஏற்படும் எனவும் குறிப்பிட்டுள்ளது.
நெருக்கடிக்கான தீர்வுகள் உடனடியாக வழங்கப்படாவிட்டால், இந்த 54 நாடுகளின் வறுமை நிலை மேலும் உயர்வதைத் தடுக்க முடியாது எனவும் ஐ.நா அபிவிருத்தி திட்டத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த 54 நாடுகளில் 46 நாடுகளின் கடன் 782 பில்லியன் டொலர்களாகும்.
அர்ஜன்டீனா, உக்ரைன் மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகள் அதிகக் கடன் பெற்றுக்கொண்ட நாடுகளின் பட்டியலில் முன்னிலையில் உள்ளன.