.webp)
Colombo (News 1st) உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் பெண்களுக்கான சுகாதார துவாய்களுக்கான (Sanitary Napkin) மூலப்பொருட்களின் இறக்குமதி மீதான வரி நீக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் ஆலோசனைக்கமைவாக இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
அதற்கமைய, 15 சதவீத சுங்க இறக்குமதி வரி, 10 முதல் 15 சதவீதமாக இருந்த செஸ் வரி, 10 சதவீதமாக இருந்த துறைமுகங்கள் மற்றும் விமான நிலைய மேம்பாட்டு வரி ஆகியன, 05 மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போதும் இடைநிலை பொருட்களை இறக்குமதி செய்யும் போதும் நீக்கப்பட்டுள்ளன.
உள்நாட்டில் உற்பத்தி செய்யப்படும் சுகாதார துவாய்களுக்கான VAT வரி, பூச்சியமாக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
முழுமைப்படுத்தப்பட்ட சுகாதார துவாய்களை இறக்குமதி செய்வோருக்கு பூச்சிய சதவீத VAT வரிக்கான சலுகை கிடைக்கும்.
இந்த வரிச் சலுகையுடன் 10 சுகாதார துவாய்கள் அடங்கிய பெக்கட் ஒன்று, 50 தொடக்கம் 60 ரூபாவிற்கிடையிலான தொகையால் விலை குறைக்கப்படவுள்ளது.
அதற்கமைய, அதன் உயர்ந்தபட்ச சில்லறை விலை 260 ரூபா தொடக்கம் 270 ரூபா வரை, விலை குறைக்கப்படுமென ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.
உற்பத்தியாளர்கள், குறித்த மூலப்பொருட்களை இறக்குமதி செய்யும் போது உரிய வரிச்சலுகையை பெற்றுக் கொள்வதற்காக கைத்தொழில் அமைச்சின் செயலாளரின் சிபாரிசுகளை பெற்றுக்கொள்ள வேண்டும் என்பதால் அது தொடர்பான வேலைத்திட்டம் தற்போது நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.
நெருக்கடியான காலப்பகுதியில் இந்த சலுகைகள் அனைத்தும் அமுலுக்கு வரும் என ஜனாதிபதி ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.