தேசிய சபை பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் சேர்ப்பு

தேசிய சபை பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளது

by Staff Writer 14-09-2022 | 3:44 PM

Colombo (News 1st) பாராளுமன்றத்தில் புதிதாக ஸ்தாபிக்கப்படவுள்ள தேசிய சபை என்ற பெயரிலான பாராளுமன்ற குழு தொடர்பான பிரேரணை ஒழுங்குப் பத்திரத்தில் சேர்த்துக்கொள்ளப்படவுள்ளது. 

தேசிய சபை தொடர்பான பிரேரணை எதிர்வரும் 20 ஆம் திகதி விவாதத்திற்கு எடுத்துக்கொள்ளப்பட்டதன் பின்னர், அதனை நிறைவேற்றிக்கொள்ள பாராளுமன்ற நடவடிக்கைகள் தொடர்பான தெரிவுக்குழுவில் தீர்மானிக்கப்பட்டுள்ளது.

தேசிய சபையின் தலைவர் பதவி சபாநாயகருக்கு வழங்கப்படவுள்ளதாக இலங்கை பாராளுமன்றத்தின் தொடர்பாடல் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரதமர், சபை முதல்வர், எதிர்கட்சித் தலைவர், ஆளும் கட்சியின் பிரதம கொறடா ஆகியோர் தேசிய சபையின் அங்கத்தவர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

இவர்களைத் தவிர, ஒன்பதாவது பாராளுமன்றத்தை பிரதிநிதித்துவப்படுத்துவோரில் 35-க்கும் மேற்படாதோர் உறுப்பினர்களாக நியமிக்கப்படவுள்ளனர்.

துறைசார் மேற்பார்வை குழுக்கள், அரசாங்க நிதி பற்றிய குழு, அரசாங்க கணக்குகள் பற்றிய குழு, அரசாங்க பொறுப்பு முயற்சிகள் பற்றிய குழு, வங்கித் தொழில் மற்றும் நிதிச் சேவைகள் பற்றிய குழு, பொருளாதார உறுதிப்படுத்தல் குழு  மற்றும் அரசாங்க கணக்குகளை கட்டுப்படுத்தும் ஏதேனுமொரு குழுவிடமிருந்து  அறிக்கைகளை கோருவதற்கான தத்துவங்களை தேசிய சபை கொண்டிருக்கும்.