அதிகாரங்களை குறைக்க கருத்துக் கணிப்பு அவசியம்

22 ஆவது திருத்தத்தில் ஜனாதிபதியின் அதிகாரங்களை குறைக்கும் சரத்துக்களை நிறைவேற்ற கருத்துக் கணிப்பு அவசியம்: உயர் நீதிமன்றம் அறிவிப்பு

by Bella Dalima 06-09-2022 | 8:16 PM

Colombo (News 1st) 22 ஆவது அரசியலமைப்பு திருத்த சட்டமூலம் அரசியலமைப்பிற்கு அமைவானதாக இருந்தாலும், சில சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு  பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையும் மக்களின் கருத்துக் கணிப்பும் அவசியம் என பாராளுமன்றத்திற்கு உயர் நீதிமன்றம்  அறிவித்துள்ளது.

நீதி அமைச்சர் ஏற்கனவே பாராளுமன்றத்தில் சமர்ப்பித்துள்ள 22 ஆவது அரசியலமைப்பு திருத்தம் தொடர்பிலான உயர் நீதிமன்ற நிலைப்பாட்டினை சபாநாயகர் இன்று பாராளுமன்றத்தில் அறிவித்தார்.

உத்தேச அரசியலமைப்பு திருத்த சட்டமூலத்தில், அரசியலமைப்பு பேரவைக்கான நியமனங்களை ஜனாதிபதி 14 நாட்களுக்குள் மேற்கொள்ளாவிட்டால், அந்த நியமனங்களை மேற்கொள்ளப்பட்டவையாகக் கருதி செயற்படுவதற்கான சந்தர்ப்பத்தை ஏற்படுத்தும் சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு மக்களின் கருத்துக் கணிப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அனுமதியும் தேவை என உயர் நீதிமன்றத்தின் நிலைப்பாட்டில் குறிப்பிடப்பட்டுள்ளது.

எனினும், இந்த சரத்துக்கள் திருத்தப்படுமாக இருந்தால், மூன்றில் இரண்டு பெரும்பான்மை வாக்குகளால் அதனை நிறைவேற்ற முடியும் எனவும் உயர் நீதிமன்றம் அறிவித்துள்ளது.

இதனை தவிர, அமைச்சர்களின் நியமனத்தின் போது பிரதமரின் ஆலோசனையை பெற்று அதனை மேற்கொள்ள வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ள சரத்துக்களை நிறைவேற்றுவதற்கு மக்களின் கருத்துக் கணிப்பும் பாராளுமன்றத்தில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை அனுமதியும் தேவை என உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

எனினும், பிரதமரிடம் கேட்டு இந்த நியமனங்களை மேற்கொள்ள முடியும் என சரத்தில்  திருத்தம் மேற்கொள்ளப்படுமாயின், மூன்றில் இரண்டு பெரும்பான்மை மாத்திரம் போதுமானது எனவும் உயர் நீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.

இதேவேளை, உயர் நீதிமன்றத்தின் தீர்மானத்திலுள்ள உத்தேச மாற்றங்களை பின்பற்றும் அதேவேளை, கருத்துக் கணிப்பின்றி 22 ஆவது அரசியலமைப்பு திருத்தத்தை அமுல்படுத்த நடவடிக்கை எடுப்பதாக நீதி அமைச்சர் கலாநிதி விஜயதாச ராஜபக்ஸ விடுத்துள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.