2022 திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் பாராளுமன்றத்தில் நிறைவேற்றம்

by Bella Dalima 02-09-2022 | 5:43 PM

Colombo (News 1st) 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டத்தின் இரண்டாவது வாசிப்பு மீதான வாக்கெடுப்பு பாராளுமன்றத்தில் சற்று நேரத்திற்கு முன்னர் (02) இடம்பெற்றது. 

இந்த திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம் கடந்த செவ்வாய்க்கிழமை நிதி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவினால் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டிருந்தது. 

இந்நிலையில், இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பில், 120 வாக்குகள் ஆதரவாகவும் 5 வாக்குகள் எதிராகவும் அளிக்கப்பட்டது. 

இதன்படி, 2022 ஆம் ஆண்டிற்கான திருத்தப்பட்ட வரவு செலவுத் திட்டம்  115 மேலதிக வாக்குகளால்  பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. 

43 பேர் வாக்களிப்பில் கலந்துகொள்ளவில்லை. 

தேசிய மக்கள் சக்தியின் மூன்று உறுப்பினர்களும் தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் இரண்டு உறுப்பினர்களுமே வரவு செலவுத் திட்டத்திற்கு எதிராக வாக்களித்துள்ளனர்.

முஸ்லிம் தேசிய கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம், அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் பாராளுமன்ற உறுப்பினர் முஷாரப் முதுநபீன், இலங்கை தொழிலாளர் காங்கிரஸின்  ஜீவன் தொண்டமான், மருதபாண்டி இராமேஷ்வரன் மற்றும் தேசிய காங்கிரஸின் தலைவர் A.L.M. அதாவுல்லாஹ் ஆகியோர் வரவு செலவுத்திட்டத்திற்கு ஆதரவாக வாக்களித்தனர்.

எனினும், பிரதான எதிர்க்கட்சியான ஐக்கிய மக்கள் சக்தி வாக்கெடுப்பில் இருந்து விலகியிருந்ததுடன்,  தமிழ் தேசியக் கூட்டமைப்பின் உறுப்பினர்கள் வாக்களிப்பின் போது சபையில் பிரசன்னமாகியிருக்கவில்லை. 

அண்மையில் அரசாங்கத்தில் பிரிந்து எதிர்க்கட்சித் தரப்பில் அமர்ந்து கொண்ட டலஸ் அழகப்பெரும உள்ளிட்ட குழுவினரும் வாக்களிப்பில் இருந்து விலகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.