லஹிரு வீரசேகரவின் பிடியாணை இரத்து

லஹிரு வீரசேகரவிற்கு பிறப்பிக்கப்பட்டிருந்த பிடியாணை இரத்து

by Bella Dalima 25-08-2022 | 8:12 PM

Colombo (News 1st) வழக்கு விசாரணையின் போது நீதிமன்றில் ஆஜராகாமையால் பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்த, மாற்றத்திற்கான இளைஞர் அமைப்பினை சேர்ந்த லஹிரு வீரசேகர சட்டத்தரணிகள் ஊடாக கோட்டை நீதவான் நீதிமன்றத்தில் இன்று ஆஜரானார்.

2017 ஆம் ஆண்டு கொழும்பு கோட்டை பிரதேசத்தில் நடைபெற்ற ஆர்ப்பாட்டமொன்றின் போது,  முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டு தொடர்பிலான வழக்கில் ஆஜராகாமை தொடர்பில் அவருக்கு எதிராக பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.

நீதிமன்றத்தில் ஆஜரான பின்னர் லஹிரு வீரசேகரவிற்கு விடுக்கப்பட்டிருந்த பிடியாணையை மீளப்பெறுவதற்கு கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே தீர்மானித்தார். 

இதேவேளை, நீதிமன்ற உத்தரவை கருத்திற்கொள்ளாமல், கொழும்பு கோட்டையில் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டமை தொடர்பில் விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த புரட்சிகர மாணவர் சங்கத்தின் தேசிய அமைப்பாளர் மங்கள மத்துமகே இன்று பிணையில் விடுவிக்கப்பட்டார்.

கோட்டை நீதவான் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்ட போதே அவர் பிணையில் விடுவிக்கப்பட்டார்.