சனத் நிஷாந்த உள்ளிட்ட மூவரின் கையடக்க தொலைபேசிகள் CID-இடம் ஒப்படைப்பு

by Staff Writer 24-08-2022 | 8:46 PM

Colombo (News 1st) கோட்டாகோகம போராட்டக்களத்தினர் மீதான தாக்குதல் தொடர்பில் சந்தேகநபர்களாக பெயர் குறிப்பிடப்பட்டுள்ள பாராளுமன்ற உறுப்பினர்களான சனத் நிஷாந்த, மிலான் ஜயதிலக்க மற்றும் டான் பிரியசாத் ஆகியோர் தமது கையடக்க தொலைபேசிகளை குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் இன்று ஒப்படைத்துள்ளனர். 

கையடக்கத் தொலைபேசிகள் இன்று குற்றப்புலனாய்வு திணைக்களத்திடம் ஒப்படைக்கப்படும் வரை 
சந்தேகநபர்களை நீதிமன்ற பொறுப்பில் வைக்குமாறு கொழும்பு கோட்டை நீதவான் பிற்பகல் உத்தரவிட்டிருந்தார்.

இந்த உத்தரவை பிறப்பித்த கொழும்பு கோட்டை நீதவான் திலின கமகே, நீதிமன்ற உத்தரவை மீறும் பட்சத்தில் பிணையை இரத்து செய்து சந்தேகநபர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் தெரிவித்திருந்தார்.

மேலதிக விசாரணைகளுக்காக மிலான் ஜயதிலக்க, சனத் நிஷாந்த, டான் பிரியசாத் மற்றும் சதா நாலக ஆகியோரின் கையடக்கத் தொலைபேசிகளை குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்குமாறு நீதிமன்றம் உத்தரவிட்ட போதிலும், அந்த உத்தரவிற்கு அமைய அவர்கள் செயற்படவில்லை என குற்றப்புலனாய்வுத் திணைக்களம் நீதவானிடம் அறிவித்திருந்தது.​
 ​​
இதனையடுத்து, சதா நாலக மற்றுமொரு வழக்கிற்காக விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள நிலையில், ஏனைய மூன்று சந்தேகநபர்களையும் இன்றைய தினம் கையடக்க தொலைபேசிகளை ஒப்படைக்கும் வரை நீதிமன்றில் விளக்கமறியலில் வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டார்.

இதேவேளை, சந்தேகநபர்களான பாராளுமன்ற உறுப்பினர் சனத் நிஷாந்த, ஊடகவியலாளர் சந்திப்பொன்றை நடத்தும் போது நீதிமன்றத்திற்கு களங்கம் ஏற்படும் வகையில் கருத்து வெளியிட்டதாக, பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணி உபுல் ஜயசூரிய இன்று நீதிமன்றத்தில் தெரிவித்துள்ளார்.

நீதிமன்ற நடவடிக்கைகளில் பங்கேற்கும் சட்டத்தரணிகள் மற்றும் சட்டமா அதிபர் திணைக்கள அதிகாரிகளுக்கு இது பாதிப்பை ஏற்படுத்தும் என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். 

பாராளுமன்ற உறுப்பினரின் வாக்குமூலம் அடங்கிய  காணொளியை சம்பந்தப்பட்ட ஊடக நிறுவனத்திடம் இருந்து வரவழைத்து, அது தொடர்பில் விசாரணை நடத்துமாறு நீதவான் இன்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்திற்கு உத்தரவிட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் சந்தேகநபராக குறிப்பிடப்பட்டுள்ள சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோனை கைது செய்து நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தாமை குறித்து பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் ஆஜரான ஜனாதிபதி சட்டத்தரணிகள் கேள்வி எழுப்பினர்.

விசாரணைகளின் முடிவில் சிரேஷ்ட பிரதி பொலிஸ்மா அதிபர் தேஷபந்து தென்னகோன் தொடர்பில் எடுக்கப்பட வேண்டிய நடவடிக்கைகள் குறித்து சட்டமா அதிபர் ஆலோசனை வழங்கவுள்ளதாக  குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள் நீதிமன்றில் தெரிவித்தனர்.

இந்த வழக்கை ஒக்டோபர் 5 ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறு நீதவான் உத்தரவிட்டார்.