PTA கைதுகளால் சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம்

பயங்கரவாத தடைச்சட்டத்தின் கீழான கைதுகளால் சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம்

by Staff Writer 23-08-2022 | 5:33 PM

Colombo (News 1st) பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்தி அரசாங்கத்திற்கு எதிராக எதிர்ப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டவர்கள் கைது செய்யப்பட்டு தடுத்து வைக்கப்பட்டுள்ளமை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் கடும் விசனம் தெரிவித்துள்ளது. 

இந்த கொடூரமான சட்டத்தின் ஊடாக கைது செய்யும் நபர்களை நீண்ட  காலம் தடுத்து  வைப்பதற்கான அதிகாரம், நிறைவேற்றதிகாரத்திற்கு வழங்கப்பட்டுள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் நிறைவேற்று சபை விடுத்துள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

தடுத்து  வைக்கும் உத்தரவுகள், அடிப்படை சட்டங்கள் மற்றும் நீதிமன்ற அதிகாரங்களுக்கு உட்பட்டதாக அமைந்தாலும், பொதுவான சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தடுத்து வைப்பதை போன்றல்லாது இந்த கைதுகள் முறையான நீதிமன்ற கண்காணிப்பிற்கு உட்படாது என  சட்டத்தரணிகள் சங்கம் சுட்டிக்காட்டியுள்ளது. 

நீதிமன்ற கண்காணிப்பு இன்றி ஒருவரை நீண்ட காலம் தடுத்து வைத்திருப்பது சர்வதேசத்தில் அங்கீகரிக்கப்பட்ட மனித உரிமை பாதுகாப்பு தரங்களுக்கு முரணானது எனவும் சட்டத்தரணிகள் சங்கம் குறிப்பிட்டுள்ளது. 

அத்தோடு, இவ்வாறு தடுத்து வைக்கப்படுவதன் மூலம் கைதி துன்புறுத்தப்படுவதற்கும் மனிதாபிமானமற்ற முறையில் நடத்தப்படுவதற்கும் வாய்ப்புள்ளதாக சட்டத்தரணிகள் சங்கத்தின் அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

நியாயப்படுத்தக்கூடிய பயங்கரவாத போக்கு காணப்படும், ஆதாரங்களுடன் கூடிய சந்தர்ப்பங்களில் மாத்திரமே பயங்கரவாத தடைச்சட்டத்தின் ஏற்பாடுகளை பயன்படுத்த வேண்டும் எனவும் அதில் குறிப்பிடப்பட்டுள்ளது. 

இதனால் பயங்கரவாத தடைச்சட்டத்தை நடைமுறைப்படுத்துவதை தவிர்த்துக்கொள்ளுமாறு சட்டத்தரணிகள் சங்கம் ஜனாதிபதியிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.