.webp)
Colombo (News 1st) அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் ஏற்பாட்டாளர் வசந்த முதலிகே உள்ளிட்ட மூவரை தடுப்புக்காவல் உத்தரவில் தடுத்து வைத்து விசாரணை செய்வதாக பொலிஸார் தெரிவித்தனர்.
கைது செய்யப்பட்டுள்ள கல்வெவ சிறிதம்ம தேரர் மற்றும் ஹாஷாந்த ஜீவந்த குணத்திலக்க ஆகியோரை போராட்டக்களத்தில் ஏப்ரல் 09 ஆம் திகதியிலிருந்து இடம்பெற்ற சம்பவங்கள் தொடர்பில், தடுப்புக் காவலில் வைத்து விசாரணை செய்யவுள்ளதாகவும் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்தது.
அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தினால் நேற்று (18) மாலை கொழும்பில் முன்னெடுக்கப்பட்ட ஆர்ப்பாட்டத்தின் போது, ஆர்ப்பாட்டக்காரர்கள் 19 பேர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டனர்.
முறையற்ற விதத்தில் ஒன்றுகூடிய குற்றச்சாட்டில் அவர்கள் கைது செய்யப்பட்டனர்.
கறுவாத்தோட்டம், கொம்பனித் தெரு, பொரளை பொலிஸ் பிரிவுகள் மற்றும் களனி பிராந்திய குற்ற விசாரணைப் பிரிவு என்பனவற்றால் சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டனர்.
இதேவேளை, கொழும்பில் நடைபெற்ற எதிர்ப்பு நடவடிக்கையின் போது கைது செய்யப்பட்ட அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் 16 உறுப்பினர்கள் பிணையில் விடுவிக்கப்பட்டுள்ளனர்.