.webp)
Colombo (News 1st) பாரதத் திருநாட்டின் 75ஆவது சுதந்திர தினம் இன்று(15) வெகுவிமர்சையாகக் கொண்டாடப்படுகின்றது.
இந்தியா சுதந்திரம் பெற்று இன்றுடன்(15) 75 ஆண்டுகள் நிறைவடைகின்றன.
இந்தியாவின் சுதந்திர தினம் அமுதப்பெருவிழாவாக உற்சாகத்துடனும், கோலாகலத்துடனும் இன்று(15) கொண்டாடப்படுகின்றது.
பிரதமர் மோடி டெல்லி ராஜ்கோட்டில் உள்ள மகாத்மா காந்தியின் நினைவிடத்திற்கு சென்று மரியாதை செலுத்தினார்.
இதனைத் தொடர்ந்து டெல்லி செங்கோட்டைக்கு சென்றிருந்த பிரதமர் மோடி 2014 இலிருந்து 9 ஆவது தடவையாக இந்திய தேசியக்கொடியை ஏற்றியதையடுத்து தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
இந்தியர்களுக்கும் இந்தியா மீது அன்பு கொண்டவர்களுக்கும் வாழ்த்துகளை கூறி உரையை ஆரம்பித்த பிரதமர், ஒரு புதிய திசையில் ஒரு புதிய தீர்மானத்துடன் முன்னெடுத்து செல்ல வேண்டிய தினம் இன்றென கூறினார்.
இதன்போது நாட்டிற்காக தம்மை அர்ப்பணித்த மகாத்மா காந்தி, ஜவஹர்லால் நேரு, அண்ணல் அம்பேத்கர் உள்ளிட்ட அனைவரையும் பிரதமர் மோடி நினைவுகூர்ந்தார்.
அடுத்த 25 ஆண்டுகள் இந்தியாவிற்கு மிக முக்கியமான காலகட்டம் என்று கூறிய பிரதமர் மோடி, ஐந்து உறுதிமொழிகளையும் பட்டியலிட்டார்.
⭕ முதலாவதாக பாரிய இலக்குகளுடன் முன்னேறிச் செல்ல வேண்டும்
⭕ இரண்டாவதாக அனைத்து வகையான அடிமைத்தனத்தையும் வேரறுக்க வேண்டும்
⭕ மூன்றாவதாக நாட்டின் பாரம்பரியத்தை நினைத்து எப்போதும் பெருமிதம் கொள்ள வேண்டும்
⭕ நான்காவதாக ஒற்றுமையின் பலத்தை உறுதியாக பற்றிக்கொள்ள வேண்டும்
⭕ இறுதியாக குடிமகனின் கடமைகளை ஆற்ற வேண்டும் ஆகிய 5 உறுதிமொழிகளை பிரதமர் மோடி இதன்போது முன்வைத்தார்.
இந்த ஐந்து உறுதிமொழிகளையும் ஏற்று, நாட்டு மக்கள் பின்பற்றினால் இந்தியாவை இன்னும் 25 ஆண்டுகளில் அபிவிருத்தியடைந்த நாடாக மாற்ற முடியும் என பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்தார்.
இதனிடையே இந்தியாவின் 75ஆவது சுதந்திர தினத்தை முன்னிட்டு, முதல்வர் மு.க.ஸ்டாலின் புனித ஜோர்ஜ் கோட்டை கொத்தளத்தில் தேசியக் கொடியினை ஏற்றி, மரியாதை செலுத்தினார்.